உலகில் ஒன்றல்ல இரண்டல்ல... பல இராமாயணங்களிருக்கின்றன என்பது எல்லோருக்கும் தெரிந்த செய்தி. இராமாயணம் இந்தியாவுடையது மட்டுமல்ல முழு ஆசியக் கண்டத்தினுடையது. அவரவர் வடிவில், தங்கள் வாழ்க்கையை இராமாயணத்தின் வழியாக வர்ணித்திருக்கும் கதைகள் எண்ணிலடங்காதவை. அதுமட்டுமல்ல - நாம் அயோத்தியை இராமனின் பிறப்பிடம் என்று சொல்லிக்கொண்டிருக்கும்போதே ஆசியாவின் பல நாடுகளில் அவர்களும் இராமனின் பிறப்பிடம் என்று அடையாளம் கண்டுகொண்ட இடங்கள் பல உள்ளன. இங்கே போற்றப்பட்ட ஒரு கதை உலகம் முழுவதும் பரவியது எப்படி? ஆணுக்கொரு இராமாயணமிருந்தால், பெண்ணிற்கென தனியொரு இராமாயணம் இருக்கிறது. குழந்தைகள் இராமாயணத்தை தங்கள் கண்கள் வழியாக மீண்டும் படைத்திருக்கிறார்கள். ஆளுபவனுக்கு ஒரு இராமாயணமிருந்தால், உழுபவனின் இராமாயணம் சொல்வதே வேறு. நாட்டுப்புற இராமாயணத்தைப் படித்தவர்கள் ஒழுங்கான இராமாயணத்தை படித்தால் அங்கே இருப்பதே வேறு.இப்படிப் பலவகையான இராமாயணங்கள் இருக்கும்போது வால்மீகி இராமாயணத்தை மட்டுமே இராமாயணம் என்று எதற்குத் திணிக்கவேண்டும்? ஒரு பண்பாடு, ஒரு உணவு, ஒரு ஆடை, ஒரு மொழி என்பதைப்போல ஒரு சிந்தனை, ஒரு எண்ணம் என்ற வேலிகளை ஓசையில்லாமல் எழுப்பும் ஒரு அறிகுறி இது.பன்முக இந்தியாவில் ஒரே கலாச்சாரத்தைப் பரப்பவேண்டிய கட்டாயம் அரசுக்கு இருக்கிறது. ‘ஓர் ஊரில் ஒரு இராஜகுமாரி இருந்தாள்.... என்றால் ஒவ்வொருவரும் ஒவ்வொரு இராஜகுமாரியை கண்முன் நிறுத்திக்கொள்ளும் சாத்தியப்பாடுகள் இருக்கும் நாட்டில் ஒரே உருவத்தை நிலைநிறுத்தும் சூழ்ச்சி நடக்கிறது. இராமன் என்றால் இப்படித்தான் என்று நாம் வடித்துவைத்திருக்கும் உருவங்களை உடைத்து ‘புருஷோத்தமன்’ என்பவனை மட்டுமே முன்வைக்கப்படுகிறது.இந்தத் தருணத்தில் ஜி.என். நாகராஜின் ‘உண்மை இராமாயணத்தின் தேடல் உருவாகியிருக்கிறது. உலகில் பரவியிருக்கும் நூற்றுக்கணக்கான இராமாயணங்களை முன்வைத்துக்கொண்டு அதன் வழியாக அந்தந்த சமுதாயத்தின் பார்வையை முன் வைக்கும் படைப்பு இது. இராமாயணங்கள் வேறுபடுவதற்குப் பின்னால் இருக்கும் சூழ்ச்சிகளைத் தேட முயலும் படைப்பு இது. ஜி.என்.நாகராஜ் நம் நடுவில் இருக்கும் சிறந்த சிந்தனையாளர். விடையை அடையும்வரை ஒரு கேள்வியைப் பின்தொடர்வது எப்படி...என்பதை அவரிடமிருந்து கற்ற விரிவான வட்டமே இருக்கிறது. குவெம்புவின் இராமாயண தரிசனம் படித்து, பாசனின் நாடகங்களைப் படித்து இராமாயணத்தைப் புரிந்துகொள்ள பதினான்கு ஆண்டுகள் மட்டுமல்ல அதனை விட மூன்று பங்கு அதிகமான ஆண்டுகளைக் கழித்திருக்கிறார். அவருடைய ஆய்வு மனப்பான்மைக்கு இந்தப் படைப்பு சாட்சி.
- Edition: 01
- Published On: 2020
- ISBN: 9788194734024
- Pages: -
- Format: Hardcover