தனது நூல்களில் பயன்படுத்திய இலக்கிய மேற்கோள்களை மட்டுமே தனி நூலாகத் தொகுக்கக்கூடிய அளவிற்கு இலக்கியங்களை நேசித்தவர் கார்ல் மார்க்ஸ். எனினும் பின்னாளில் அடித்தளம், மேற்கட்டுமானம் எனப் பிரித்து இலக்கிய உற்பத்தியைப் பொருள் உற்பத்தியுடன் நேருக்கு நேராக இறுக்கமாகப் பொருத்திப் பார்த்த வகையிலும், சோஷலிச எதார்த்தவாதம் என இலக்கிய ஆக்கங்களை எதார்த்தவாதத்துடன் இறுக்கமாகப் பிணைத்த வகையிலும், மார்க்சிய இலக்கிய விமர்சனமும் படைப்புகளும் தேக்கத்தை அடைந்தன.எனினும் மார்க்ஸ்-எங்கல்ஸ் தொடங்கி ப்ரெக்ட் முதலானோர் இந்த வரட்டுப் பார்வைக்குள் முடங்கவில்லை. சோவியத் ருஷ்யாவில்கூட மாக்சிம் கார்கி போன்றவர்களிடமும் பிற்காலத்தில் மாற்றங்கள் ஏற்பட்டன. தொடர்ந்து மேலை மார்க்சியர்களும் பின்அமைப்பியவாதிகளும் மார்க்சிய இலக்கிய நோக்கை இடையில் ஏற்பட்ட இறுக்கங்களிலிருந்து தளர்த்தி வளர்த்தெடுத்தனர்.இவ்வாறு அமைப்பியல், பின்அமைப்பியல், பின்நவீனத்துவம் முதலான நவீன சிந்தனைகள் விரிவாக்கித் தந்துள்ள சாத்தியப்பாடுகளை எல்லாம் உள்வாங்கி, இலக்கியப் பிரதிகளை அணுகுவதன் அவசியத்தைத் தமிழ்ச்சூழலில் வற்புறுத்தியவர் அ. மார்க்ஸ். கோட்பாட்டு ரீதியாகவும் தூலமான பிரதியியல் ஆய்வுகளாகவும் அவருடைய பங்களிப்புகள் வெளிப்பட்டன. இதன் மூலம் தொடக்கத்தில் இதற்கு எதிராக இருந்தவர்களே பின்னாளில் சோஷலிச எதார்த்தவாதம் காலத்திற்கு ஒவ்வாதது எனக் கைவிட நேர்ந்ததைக் கண்டுகொள்ள உதவுகிறது இந்த நூல்.அ. மார்க்சின் வளர்ச்சிப் போக்கில் வெளிப்பட்ட இப்படியான மூன்று முக்கிய நூல்களின் தொகுப்பாக அமைகிறது இந்தப் புத்தகம்; பழமைவாதிகளைப் போல இலக்கிய நவீனத்துவத்தை ஒதுக்காமலும், அமைப்பியல் போன்ற அணுகல்முறைகளின் பெயரால் பழைய இலக்கியத் திருவுரு வழிபாட்டைத் தொடராமலும் ‘மணிக்கொடி’ உள்ளிட்ட பல இலக்கியப் புனிதங்களை அவர் கட்டவிழ்க்கும் பாங்கும் அரசியல் பண்பாட்டு இயக்கத்தில் அக்கறையுள்ள வாசகர்களுக்குப் புதிய வெளிச்சத்தை அளிக்கும்.
- Edition: 01
- Published On: 2021
- ISBN: -
- Pages: 496
- Format: Paperback