0 ஆம் நூற்றாண்டின் புரட்சிகரச் செயல்பாடுகளிலும் மார்க்சிய சிந்தனையிலும் ரோசா லக்சம்பர்க் முதன்மையானதோர் இடத்தை வகிக்கிறார்.1871 ஆம் ஆண்டில் போலந்தில் ஒரு மத்தியதர வர்க்க யூதக் குடும்பத்தில் பிறந்தவர் இவர், இளமையிலேயே போலந்தை விட்டு வெளியேறி சில காலம் ஸ்விட்சர்லாந்திலும் பின்னர் ஜெர்மனியில் சமூக சனநாயகக் கட்சியின் முன்னணித் தலைவர்களில் ஒருவராகவும் வாழ்ந்தார்.மிகச் சிக்கலானதொரு காலகட்டத்தில் ஜெர்மானிய சமூக ஜனநாயகக் கட்சிக்கும்,சர்வதேச கம்யூனிஸ்ட் இயக்கத்திற்கும் அடிப்படையிலான பங்களிப்பை வழங்கினார்.அக்காலத்திய அரசியல் நெருக்கடிகள் அவரது வாழ்வின் கடைசி ஆண்டுகளையும் நிர்ணயித்தன.1919 ஆம் ஆண்டில் ஜெர்மனியின் எதிர்ப் புரட்சியாளர்களால் ரோசா லக்சம்பர்க் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டார்.1898ல் ரோசா லக்சம்பர்க் எழுதிய "சீர்திருத்தமா, புரட்சியா?" என்ற நூல் வெளிவந்தது.முதலில் கட்டுரைகளாக எழுதப்பட்டு பின் அது நூல் வடிவம் பெற்றது. எட்வர்ட் பெர்ன்ஸ்டெயினின் சீர்திருத்தவாதத்திற்கு எதிரான அடிப்படையிலான வாதங்களை ரோசா தனது நூலில் முன்வைத்தார். சோசலிசம்தான் சமூக வரலாற்றின் அடிப்படையிலான முரண்களைத் தீர்ப்பதற்கான ஒரே வழிமுறை என்பதை மறந்து பெர்ன்ஸ்டெயின், அது ஏதோ நமது விருப்பு வெறுப்பின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவதாக கொள்கிறார் என்று ரோசா வாதிட்டார்.புரட்சி என்பது வரலாற்றின் தவிர்க்க முடியாத தேவை,வரலாறு நெடுக சமூக முரண்கள் தீவிரமடைந்து வருகின்றன, முதலாளிய சமூகத்தில் அவை உச்சத்தை எட்டுகின்றன,அதுவே மார்க்சியக் கோட்பாட்டின் தருக்கவியல் என்று ரோசா லக்சம்பர்க் எடுத்துக்காட்டினார்.1897ஆம் ஆண்டு ரோசா லக்சம்பர்க் ஜூரிச் *(ஸ்விட்சர்லாந்து) பல்கலைகழகத்தில் தனது டாக்டர் பட்டத்திற்கான ஆய்வேட்டைச் சமர்பித்தார். "போலந்தின் தொழில்மயமாக்கம்" என்பது அவரது ஆய்வுத் தலைப்பு.அந்நாட்களில் முன்னோடி கம்யூனிஸ்ட் தலைவர்கள் அவரவர் நாடுகளின் முதலாளிய தொழில்மயமாக்கத்தின் வளர்ச்சி நிலை குறித்த மதிப்பீடுகளில் ஈடுபட்டனர்.1913ல் ரோசா லக்சம்பர்கின் "மூலதனப் பெருக்கம்" (The Accumulation of Capital) என்ற நூல் வெளியாயிற்று. மார்க்ஸ் தனது "மூலதனம்"நூலில் ஆரம்ப மூலதனக் குவிப்பு என்பது குறித்தும்,தொடர்ந்து மூலதனம் எவ்வாறு பெருக்கமடைகிறது என்பது குறித்தும் எழுதியுள்ளார்.ரோசாவும் மார்க்சை தொடர்ந்து இப்பிரச்சினைகள் ஆய்வு செய்கிறார்.ஏகாதிபத்தியத்தின் உலகப் பொருளாதார அமைப்பை,ரோசா,அதன் முதலாளிய உள்வட்டம்,முதலாளியமில்லாத வெளிவட்டம் என்று இரண்டாகப் பிரித்துக் கொள்கிறார். முதலாளிய உள்வட்டத்தின் இயக்கத்திற்கு காலனிய வெளிவட்டம் ஒரு தவிர்க்க முடியாத தேவை என்றும் அவர் நிர்ணயிக்கிறார். குறிப்பாக, முதலாளிய உள்வட்டத்தில் மூலதனப் பெருக்கம் நிகழ்வதற்கு காலனிய வெளிவட்டமே அடிப்படையான ஆதாரம் ஆகிறது என்று ரோசா எழுதுகிறார்.மூன்று வழிகளில் காலனிய வெளிவட்டத்திலிருந்து முதலாளிய உள்வட்டத்திற்கு மூலதனம் பாய்கிறது.முதலாவதாக,காலனிய நாடுகளின் இயற்கை வளங்கள் காலனியப் பிரதேசங்களிலிருந்து மேற்கு நாடுகளுக்கு கொண்டு செல்லப்படுகின்றன. இரண்டாவதாக, குறைந்த விலையிலான உழைப்பு சக்தி கிழக்கிலிருந்து மேற்கு நாடுகளுக்கு ஏற்றுமதி ஆகின்றது. மூன்றாவதாக, காலனி நாடுகளை ஐரோப்பியப் பேரரசுகள் தமது உற்பத்திப் பொருள்களுக்கான சந்தைகளாகவும் பயன்படுத்திக் கொள்கின்றன.ரோசா லக்சம்பர்கும் லெனினும் புரட்சி எனும் கோட்பாட்டு நிலைப்பாட்டுக்காகக் காத்திரமாகப் போராடினார்கள்.பல மேற்கு ஐரோப்பியத் தலைவர்கள் ரஷ்யப் புரட்சியை ஆதரிக்காத சூழல்களில் ரஷ்யப் புரட்சிக்குத் தனது ஆதரவை வெளிப்படையாகத் தெரிவித்தவர் ரோசா லக்சம்பர்க்.ரோசா, லெனின் ஆகிய இருவருமே புரட்சியில் வெகுஜனப் பங்கேற்புக்கு முதலிடம் வழங்கினர்.புரட்சி காலங்களில் வெகுமக்கள் வேலை நிறுத்தங்கள் (Mass Strikes) மிக முக்கியமான பங்கேற்கின்றன என்ற கருத்தை ரோசா லக்சம்பர்க் தொடர்ந்து வலியுறுத்தி வந்தார்.வெகுமக்களின் தன்னிச்சையான (Spontaneity) எழுச்சிகள் குறித்தும் அவர் அதிகம் எழுதினார்.ரோசா லக்சம்பர்கை லெனின் "கழுகு" என்று கூறினார். ரோசாவின் புரட்சிகர ஆற்றல்களையும் பார்வைக் கூர்மையையும் வைத்தே அப்படி அவர் அழைக்கப்பட்டிருக்க வேண்டும் என்று நாம் அதனை புரிந்து கொள்ள முடியும்.ஜெர்மானியச் சூழல்களில் வேறு எவரையும் விட அதிக உயரத்திற்கு பறந்து சென்றவர் ரோசா என்பதற்காகவே லெனின் அவரை "கழுகு" என்றழைத்திருக்க வேண்டும் அவர் தனித்து பறந்தவர் என்பதற்காகவும் அப்படிச் சொல்லியிருக்கலாம்.இந்நூலின் ஆசிரியரான ஜான் நிக்ஸன் ரோசா லக்சம்பர்க் கடந்து வந்த கடினமான தனிமைப் பயணம் குறித்து இந்நூலில் குறிப்பிட்டு எழுதுகிறார். பல மூத்த தலைவர்களோடு அவர் போராட வேண்டியிருந்தது.அவருக்குப் பல தோல்விகள் நிகழ்ந்தன.இருப்பினும் ரோசாவின் தனிமையும் தோல்விகளும் அவர்க்கு ஓர் ஆழமான அகப்பார்வையை வழங்கின என்று ஜான் நிக்சன் மதிப்பிடுகிறார். ஏராளமாக நம்மை சிந்திக்க வைக்கும் மதிப்பீடு இது.
- Edition: 01
- Published On: 2021
- ISBN: -
- Pages: -
- Format: Paperback