நூலாசிரியர் பீனி அடம்ஸாக் என்பாரிடம் இந்த நூல் குழந்தைகளுக்கானதா? என்று ஒரு கேள்வி கேட்கப்பட்ட போது, இல்லை இது எல்லோருக்குமானது எந்த வயதினரானாலும் அவர்களைக் குழந்தைகளாகப் பாவித்து நான் எழுதியுள்ளேன் என்று பதிலுரைத்துள்ளார். உண்மைதான் இந்நூல் எளிமையான மொழியில் எழுதப்பட்டுள்ளது. அதே எளிமை மொழிபெயர்ப்பாளராலும் காப்பாற்றப்பட்டுள்ளது.நூல் முழுவதிலும் ஒரு கதைத் தன்மை பரந்துள்ளது. நூலில் முதலாளிகளுக்குப் பதிலாகத் தொழிற்சாலைகள் பேசுகின்றன. அரசர்களுக்குப் பதிலாகப் பேராசை கொண்ட ராணிகள் ஆட்சிபீடத்தில் அமர்ந்திருக்கின்றனர்.இந்நூலைப் படிக்கும்போது, குழந்தைகளைப் போலச் சுதந்திரமாகக் கற்பனை செய்யுங்கள், கனவு காணுங்கள்! என்று ஆசிரியர் நம்மை அழைக்கிறார். நீதி நியாயத்திற்காகப் பழங்காலம் தொட்டே தேவதைக் கதைகள், அதிசயக் கதைகள் எழுதப்படுவதில்லையா? என்று நூலாசிரியர் சுட்டிக் காட்டுகிறார்.இந்த நூலை நான் இன்னும் முழுதும் எழுதி முடிக்கவில்லை,நீங்களே எழுதி முடியுங்கள்!என்று கூறுகிறார்.இவை எல்லாமாகச் சேர்ந்துதான் இந்நூல் "குழந்தைகளுக்கான" நூலாக ஆகிறது.பொதுவுடைமை என்பதைப் புரிந்து கொள்ள இயங்கியல் பொருள்முதல்வாதம், வரலாற்றுப் பொருள்முதல்வாதம் போன்ற ஆழங்களைத் தேடி அலைய வேண்டாம்; அரசியல் விஞ்ஞானத்தில் பட்டம் பெற்றவர்களாலேயே பொதுவுடைமையைப் புரிந்து கொள்ள முடியும் என்பதுவும் தேவையில்லை;நடைமுறை வாழ்க்கையில் பொதுவுடைமையை அவசியப்படுத்திய முதலாளியம் பற்றிய புரிதலிலிருந்தே தொடங்குவோம் என நூலாசிரியர் கருதுகிறார்.நூலின் மூன்றாவது பகுதி "பொதுவுடைமை வேட்கை" எனத் தலைப்பிடப்பட்டுள்ளது. இந்த தலைப்பும் அது குறித்த விவாதமும் விரிவான ஒரு பின்புலத்தை கொண்டவை.இடதுசாரிகள் அல்லது கம்யூனிஸ்ட்கள் ஒவ்வொரு முறை பொதுவுடைமைக்கான தமது முயற்சிகளில் தோற்கும்போது வரலாற்று ரீதியாகவும் இருத்தலியல் ரீதியாகவும் ஒரு துயரம் அவர்களைப் பற்றிப் பீடிக்கிறது.வால்ட்டர் பெஞ்சமின் என்ற மேற்கத்திய மார்க்சியர் இதனை இடதுசாரித் துயரம் (Left Wing Melancholy) என்று பெயரிட்டார்.தொடர்ந்து அதுகுறித்து பேசும்போது அன்னார்,இடதுசாரித் துயரம் கம்யூனிஸ்டுகளை முழுவதும் வீழ்த்திவிடுவதில்லை; மாறாக அது பொதுவுடைமையை மறு கட்டுமானம் செய்வதற்கான ஒரு படைப்புக்களமாக உருவெடுக்கிறது என்று சித்திரித்தார். இதையொட்டி ஒரு புதிய கருத்தாக்கமாக கம்யூனிஸ்ட் வேட்கை (Communist Desire,Desire for Communism) என்ற சொல்லாக்கம் உருவானது.இடதுசாரிகள் தமது துயரத்தை வென்று புதிய படைப்பாக்கத் தளங்களை நோக்கி முன்னேறிச் செல்லுவதற்கான ஆதாரமாக கம்யூனிஸ்ட் வேட்கை அமைகிறது என்ற கோட்பாட்டு விளக்கம் உருவானது.
- Edition: 01
- Published On: 2021
- ISBN: 9788123440606
- Pages: 124
- Format: Paperback