“சுயமரியாதைச் சமதர்மம்” என்ற சொற்சேர்க்கையும் தமிழுக்கான மார்க்சியத்தைத் தேடியதன் ஒரு முதன்மையான, முக்கியமான கணு என்றே சொல்ல வேண்டும். சாதியா, வர்க்கமா? அந்த இரண்டையும் பொருத்தமாக எந்தக் கணுவில் இணைப்பது? என்ற கேள்விகள் பல்வேறு கோணங்களில் பேசப்படுகின்றன. நமது சொந்தப் பிரச்சினைகளில் தொடங்கினால் தான் நமக்குத் தேவையான சொந்த சோசலிசத்தைச் சென்று சேரமுடியும். எங்கே வலிக்கிறதோ, என்ன வலியோ அதற்கே உரிய மருந்தைக் கொடுக்க வேண்டும். இன்னும் நாம் நமது சொந்த வலி களைச் சரியாகக் கண்டுகொள்ளவில்லை. தொடர்ந்து சுற்றிச் சுற்றி வந்து கொண்டிருக்கிறோம். 1935களின் சுயமரியாதைச் சமதர்மம் முழுசாக எல்லாவற்றையும் கண்டு சொல்லிவிட்டதாக கருதிவிட முடியாது.
ஆயின் அன்றைய விவாதங்கள் அதற்கான முறையியலை இந்தத் தேடலில் ஊடுபாவ விட்டுள்ளன. நமது சொந்தப் பிரச்சினை களிலிருந்து தொடங்க வேண்டும். எந்தப் பிரச்சினைகள் வரலாறு நெடுக நம்மைத் தாங்க முடியாமல் வருத்தி வருகின்றனவோ அவற்றை அடையாளம் கண்டு விவாதிப்பதிலிருந்து, அவற்றுக்கானத் தீர்வுகளை முன்வைப்பதன்மூலம் நமக்கான சமதர்மத்தை எட்ட வேண்டும். இந்த நூலில் தோழர் எஸ். வி. ராஜதுரையும் தோழியர் வ. கீதா அவர்களும் ஒரு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பணியைத் தமிழுக்கும் மார்க்சியத்துக்கும் செய்து தந்துள்ளனர். பெரியாரியத்துக்கும் மார்க்சியத்துக்கும் தமிழ் சூழல்களில் நிகழ்ந்த ஓர் இன்றியமையாத உரையாடலை, விவாதத்தை இங்கு மறுகட்டமைப்பு செய்துள்ளனர்.
- Edition: 01
- Published On: 2018
- ISBN: 9788123435275
- Pages: 1056
- Format: Hardcover