எத்தனை பெரிய உயர் பதவியும்; மக்களாட்சியில் மக்களுக்காகப் பணியாற்றக் கொடுக்கப்படுவதுதான். அதனால்தான் ‘‘மக்களிடம் செல், அவர்களிடமிருந்து கற்றுக்கொள், அவர்களை மேம்படுத்து'' என்றார் அறிஞர் அண்ணா. மாவட்ட ஆட்சியர் பணி என்பது ராஜபாட்டையில் கம்பீரமாகப் போவதல்ல; மக்களின் குறைகளை அறிந்து அவற்றைக் களைந்து அவர்களின் முகங்களை மலரவைப்பதற்கான பணி என்று நன்கு உணர்ந்தவர் உதயச்சந்திரன் என்பதை, அவரின் ஆட்சியர் பணி அனுபவங்களில் இருந்து அறிய முடிகிறது. தான் ஆட்சியராகப் பணிபுரிந்த மாவட்டங்களில் ஆற்றிய பணிகள் குறித்தும், தான் பொறுப்பேற்ற துறைகளில் தன்னால் இயன்றளவு செய்த முன்னெடுப்புப் பணிகள் பற்றியும் அதன்மூலமாக தனக்கேற்பட்ட அனுபவங்களையும் கட்டுரைகளாகத் தந்துள்ளார்.சிறந்த ஆளுமையாக அறியப்பட்ட உதயச்சந்திரனை சிறந்த எழுத்தாளராகவும் அறியச் செய்யும் இந்த 40 கட்டுரைகள் வெறும் அனுபவத்தை மட்டும் சொல்பவை அல்ல. கலை, இலக்கியம், பண்பாடு, கலாசாரம், வரலாறு, அறிவியல் என பல்வேறு தளங்களில் பயணித்து ஒவ்வொன்றைப் பற்றியும் ஆய்வு நோக்கில் சொல்லும் கட்டுரைகளாகும். ஏழை எளிய விவசாயிகளை வரிச் சுமையிலிருந்து மீட்ட தாமஸ் மன்ரோவின் கருணை, மதுரை மாநகரை மாற்றியமைத்த கலெக்டர் பிளாக்பர்ன், மகாத்மா காந்தியின் தமிழ் மொழி பற்று.. இப்படி வரலாற்று நிகழ்வுகளை சமகால நிகழ்வுகளோடு முடிச்சுப்போட்டு நேர்த்தியாகச் சொல்லியிருக்கிறார். அரசு ஊழியர்களைப் பற்றி பொதுமக்களிடம் இருக்கும் பொதுவான கண்ணோட்டத்தை இந்த நூல் மாற்றிவிடும். சில அரசு ஊழியர்கள் எப்படி கடமையுணர்வோடு நேர்மையாக பணியாற்றுகிறார்கள், அவர்களின் அர்ப்பணிப்பு எப்படிப்பட்டது என்பதை இந்த நூல்வழி அறிய முடிகிறது.ஐ.ஏ.எஸ் தேர்வு எழுதுகிறவர்களுக்கு உந்து சக்தியாகவும் ஐ.ஏ.எஸ் பணியில் புதிதாய் ஈடுபட்டிருப்போருக்கு வழிகாட்டியாகவும் இந்த நூல் விளங்கும் என்பதில் வியப்பில்லை. மாபெரும் பதவிதனில் அமர்வது மக்களுக்காகவே என்பதை இந்த நூல் உணர்த்துகிறது.
- Edition: 01
- Published On: 2020
- ISBN: -
- Pages: -
- Format: Paperback