உலக அளவில் விற்பனையில் பெரும் சாதனைகளைப் படைத்த, ஸ்டீபன் ஹாக்கிங் எழுதிய ‘A Brief History of Time’ நூல், ஓர் அற்புதமான அறிவியல் படைப்பாகும். ஹாக்கிங்கின் வசீகரமான எழுத்து நடையும், காலம் மற்றும் வெளியின் இயல்பு, படைப்பில் கடவுளின் பங்கு, பிரபஞ்சத்தின் வரலாறு மற்றும் எதிர்காலம் போன்ற, அவர் கையாள்கின்ற சுவாரசியமான அறிவியல் விவகாரங்களும் நம் மனங்களைக் கட்டிப் போடுபவையாக இருக்கின்றன. ஆனால் அந்நூல் வெளியிடப்பட்டதிலிருந்து, அதில் இடம்பெற்றிருந்த மிக முக்கியமான கோட்பாடுகளில் சிலவற்றைப் புரிந்து கொள்வது மிகக் கடினமாக இருந்ததாகப் பேராசிரியர் ஹாக்கிங்கிற்கு வாசகர்கள் தொடர்ந்து கடிதங்கள் எழுதி வந்துள்ளனர்.அவர்களுடைய கோரிக்கைகளுக்கு இணங்கி, அந்நூலில் கையாளப்பட்ட அனைத்து விஷயங்களையும் எவரொருவரும் எளிதில் புரிந்து கொள்வதற்காகவும், சமீபத்திய அறிவியல் அவதானிப்புகளையும் கண்டுபிடிப்புகளையும் பற்றிய தகவல்களை மக்களுடன் பகிர்ந்து கொள்வதற்காகவும் ஹாக்கிங் படைத்துள்ள அற்புதமான நூல்தான் ‘A Briefer History of Time என்ற இந்நூல்.இது ‘மிகச் சுருக்கமானதாக’ இருந்தாலும்கூட, உண்மையில், முந்தைய நூலின் மிக முக்கியமான அறிவியல் விவகாரங்களை இது அதிக விரிவாக விளக்குகிறது. குழப்பமான எல்லைச் சூழல்கள் குறித்த எண்கணிதம் போன்ற சிக்கலான கோட்பாடுகள் அகற்றப்பட்டுவிட்டன. அவற்றுக்குப் பதிலாக, முந்தைய நூல் நெடுகிலும் இழையோடிய மிகவும் சுவாரசியமான, ஆனால் புரிந்து கொள்ளக் கடினமாக இருந்த சார்புக் கோட்பாடு, வளைவான வெளி, குவாண்டம் கோட்பாடு போன்ற அறிவியல் கோட்பாடுகள் ஒவ்வொன்றுக்கும் இந்நூலில் தனித்தனி அத்தியாயங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.பேராசிரியர் ஸ்டீபன் ஹாக்கிங் பதின்மூன்று கௌரவ டாக்டர் பட்டங்களைப் பெற்றவர். 1982ல் ஆங்கிலேய அரசாங்கத்தால் ‘சிபிஇ’ பட்டமும், 1989ல் ‘கம்பேனியன் ஆஃப் ஆனர்’ பட்டமும், 2009ல் ‘பிரெசிடென்ஷியல் மெடல் ஆஃப் ஃபிரீடம்’ பதக்கமும் அவருக்கு வழங்கப்பட்டன. பிரிட்டனின் ‘ராயல் சொசைட்டி’ அமைப்பிலும் அமெரிக்க அறிவியல் கழகத்திலும் அவர் ஓர் உறுப்பினராகத் திகழ்ந்தார். 1963ல் அவருக்கு இயக்க நரம்பணு நோய் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவருக்கு அப்போதுதான் 21 வயது நிறைவடைந்திருந்தது. அவர் ஒரு சக்கரநாற்காலியில் முடங்கிக் கிடக்கும்படி ஆனபோதும்கூட, அவர் தன்னுடைய குடும்ப வாழ்க்கையையும் தன்னுடைய இயற்பியல் ஆராய்ச்சிகளையும் தொடர்ந்து மேற்கொண்டார். கோட்பாட்டு இயற்பியலாளரான அவர், உலகம் நெடுகிலும் பயணித்துப் பொதுச் சொற்பொழிவுகளை நிகழ்த்தினார். ஐன்ஸ்டைனுக்குப் பிறகு இவ்வுலகம் கண்ட மிகச் சிறந்த கோட்பாட்டு இயற்பியலாளராகக் கருதப்படுகின்ற ஸ்டீபன் ஹாக்கிங், 2018ம் ஆண்டு மார்ச் 14ம் நாளன்று தன்னுடைய 76வது வயதில் இயற்கை எய்தினார்.லெனர்டு மிலாடினோவ் ஒரு கோட்பாட்டு இயற்பியலாளர் மற்று நூலாசிரியர் ஆவார். இயற்பியலில் பல முக்கியக் கண்டுபிடிப்புகளுக்குக் காரணமாக இருந்துள்ள அவர், சுவாரசியமூட்டும் விதத்தில் அறிவியலைச் சாமானியர்களிடம் கொண்டு சேர்ப்பதில் பேரார்வம் கொண்டவர். கால்டெக் பல்கலைக்கழகத்தில் ஒரு பேராசிரியராகப் பணியாற்றிய அவர், சிறப்பாக விற்பனையாகிக் கொண்டிருக்கும் ஐந்து நூல்களைப் படைத்துள்ள ஒரு வெற்றிகரமான, விருது-பெற்ற நூலாசிரியரும்கூட. பேராசிரியர் மிலாடினோவ், த நியூயார்க் டைம்ஸ், வால் ஸ்டிரீட் ஜர்னல், சயண்டிபிக் அமெரிக்கன், நேச்சர், சைக்காலஜி டுடே போன்ற பல பத்திரிகைகளில் கட்டுரைகள் எழுதி வந்துள்ளார். அவர் பொதுமக்களிடையேயும் அறிவியல் சொற்பொழிவுகள் நிகழ்த்தியுள்ளார். தன்னுடைய எழுத்து மற்றும் பேச்சின் மூலம் அவர் எண்ணற்றோரிடையே அறிவியல் ஆர்வத்தைத் தூண்டியுள்ளார்.
- Edition: 01
- Published On: 2022
- ISBN: 9789355431004
- Pages: 200
- Format: Paperback