அத்துறையில் தனது முனைவர் பட்ட ஆய்வினை மேற்கொண்டு சிறந்த முறையில் ஆய்வுக் கட்டுரையை வழங்கி பலரின் பாராட்டுகளைப் பெற்றவர். கற்றறிவு, பெற்றறிவு துணை கொண்டு தொடர்ந்த தன்னை ஆய்வுப் பணியில் ஈடுபடுத்திக் கொண்டு பல பொருளாதாரத் தளங்களில் கட்டுரைகளை எழுதி வருகிறார். இந்நூல் 31 பகுதிகளைக் கொண்டுள்ளது. ஒவ்வொரு பகுதியிலும் புள்ளி விவரங்களின் அடிப்படையில் தனது கருத்துகளைப் பதித்துள்ளார். வேளாண் துறை, ஊரக வளர்ச்சித்துறை, தொழில் துறை, கட்டமைப்புத் துறை, வங்கித்துறை ஆகிய துறைகளில் ஏற்பட்டு வருகிற மாற்றங்கள் அடித்தளத்தில் வாழும் மக்களின் வாழ்வியலில் ஏற்றங்கள் ஏற்பட்டுள்ளதா என்பதையும் இந்நூல் ஆய்வு செய்கிறது. வேலையின்மை, பசிக் கொடுமை, பொருளாதார ஏற்றத்தாழ்வு ஆகியன பெருகி வருகிறது என்பதையும் இந்நூலில் பரந்து காணப்படுகிற கருத்தியலோடு புள்ளியியலும் சேர்ந்து பயணம் செய்கிறது.