எஸ்.ராமகிருஷ்ணன் முதலில் பயணி. அப்புறம்தான் எழுத்தாளர். தனது கால்களால் இந்தியாவின் பல பகுதிகளை அளந்த, அளந்துவரும் சமூக சர்வேயர். துணையெழுத்து, கதாவிலாசம், தேசாந்திரி, கேள்விக்குறி, சிறிதுவெளிச்சம் என தனது பயணக் குறிப்புகளை ஆனந்த விகடனில் எத்தனையோ தடவைகள் எழுதிவிட்டார் எஸ்.ரா. ஆனாலும், சொல்வதற்கு அவரிடம் ஏராளமான தகவல்கள் கொட்டிக்கிடக்கின்றன. அவர், தனது பயணத்தைத் தொடர்ந்து கொண்டே இருப்பதுதான் இதற்குக் காரணம்.‘‘வாழ்க்கை மிகவும் வியப்பானது. சிலரது துயரங்கள் ஒருபோதும் தீர்க்க முடியாதவை. ஆயிரம்பேர் ஆறுதல் சொன்னாலும் அமைதிகொள்ள முடியாத வேதனைகளும் இருக்கத்தான் செய்கின்றன” என்று ஓர் இடத்தில் எஸ்.ரா எழுதி இருக்கிறார். தினந்தோறும் நம்மை வியக்க வைத்துக்கொண்டு இருப்பதே வாழ்க்கை. அந்த வாழ்க்கையே நம்மை அச்சுறுத்தவும் செய்கிறது. அந்தப் பயமே இல்லாமல் விளையாட்டாகவும் நடந்துகொள்கிறோம். அந்த வேதனைகளை இந்தப் புத்தகத்தின் பல்வேறு இடங்களில் கவனிக்க முடிகிறது.‘‘இரண்டு தேசங்களுக்கு இடையில் உருவாகும் பிரச்னைகளைக்கூடப் பேசித் தீர்த்துக்கொண்டுவிட முடிகிறது. ஆனால், உறவுகளுக்குள் ஏற்படும் சிக்கலை எவராலும் பேசித்தீர்த்துவிட முடியவில்லை. முந்தைய காலங்களில் சில பெரியவர்கள் இப்படிப் பேசி ஒன்று சேர்த்து வைப்பதைக் கடமையாகக் கருதினார்கள். பெரியவர்கள் சொன்னால் இரண்டு வீட்டிலும் ஏற்றுக்கொண்டார்கள். இன்று அப்படியான பெரியவர்களும் இல்லை. ஏற்றுக்கொள்ளும் மனநிலையில் எந்த மனிதரும் இல்லை” என்று போகிறது எழுத்து.சுட்டிக்காட்ட மனிதர்கள் இல்லை என்பது உண்மைதான். ‘இந்திய வானம்’ போன்ற புத்தகங்கள் அந்தக் கடமையை நிச்சயம் செய்யும்.
- Edition: 01
- Published On: 2016
- ISBN: -
- Pages: 240
- Format: Paperback