வங்காள விரிகுடாவில் சுவர்ணமுகி மற்றும் கோடியக்கரைக்கு இடையே அமைந்திருக்கும் சோழமண்டலத்தின் வரலாற்றை (கி.பி.1500 -1600) ஆராய்வதுதான் இந்நூல். இக்காலகட்டத்தில் சோழமண்டலம் விஜயநகரப் பேரரசின் ஆட்சிக்கு உட்பட்டிருந்தது.அந்த காலகட்டத்தில் சோழமண்டலப் பகுதியில் வேளாண்மை, தொழில்கள், வணிகம் எந்த நிலையில் இருந்தன? அவற்றை வளர்ப்பதற்காக விஜயநகர அரசு மேற்கொண்ட திட்டங்கள், செயல்பாடுகள் எவை? என்பதைப் பற்றியெல்லாம் இந்நூல் விரிவாக ஆராய்கிறது.முதன்முறையாக இக்காலகட்டத்தில்தான் சோழமண்டலப் பொருளாதாரம், ஆசியா மற்றும் ஐரோப்பாவின் பொருளாதாரங்களுடன் தீவிரமாக இணைந்து செயல்பட்டது. சோழமண்டலப் பகுதியுடன் முதலில் வணிகத் தொடர்புகளை ஏற்படுத்திக் கொண்டவர்கள் போர்ச்சுக்கீசியர்கள். வெளிநாட்டு வணிகத்திற்கு முக்கியத்துவம் தரப்பட்டது.ஆனால், சோழமண்டல சமூகத்தில் விவசாயிகளின் நிலை சரிந்தது. ஆட்சியாளர்கள் விவசாயிகள் மீது சுமத்திய பளுவான நியாயமற்ற வரிகளால், 16 ஆம் நூற்றாண்டில் விவசாய சமூக அமைப்பில் மாற்றங்கள் ஏற்பட்டன.விவசாயிகளின் வாழ்க்கை மிகவும் மோசமாக இருந்தது. திருக்கோவிலூரில் வரி செலுத்த முடியாத விவசாயிகள் நிலங்களை மிகக் கீழான விலைகளுக்கு விற்றுவிட்டு இடம் பெயர்ந்துவிட்டனர். வறுமை, பஞ்சம், வறட்சி, வரிப்பளு போன்ற சமூக - பொருளாதார நெருக்கடிகளால் மக்கள் தங்களை அடிமைகளாக விற்றுக் கொண்டனர்.அதே சமயம், வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்ட துணி வகைகளை உற்பத்தி செய்த நெசவாளர் சமூகங்களுக்கு சில சிறப்பு உரிமைகளும், மரியாதைகளும் தரப்பட்டன. இவை போன்ற பல அரிய தகவல்கள், அக்கால சமூக, அரசியல், பொருளாதார வாழ்க்கையையும் இன்றைய நிலையையும் ஒப்பிட்டுப் பார்க்கத் தூண்டுகின்றன.
- Edition: 01
- Published On: 2017
- ISBN: -
- Pages: 298
- Format: Paperback