பொதுவாகவே நாடகக் கலையானது அறிவுப் புரட்சிக்கும், அறிவியல் புரட்சிக்கும் அழுத்தமான இயங்கு வடிவம் என்பதை உலகளாவிய நிலையிலான வரலாற்று நிகழ்வுகள் அறியத் தருகின்றன. குறிப்பாக அடிமை கொண்டோரின் உள்மனத்துள் கனலாய் கருக்கொண்டிருக்கும் விடுதலைத் தீயினை கொளுந்துவிடச் செய்யும் வண்ணம் உடனடி செயன்மையை அல்லது காரணியை உருவாக்கும் வல்லமை நாடகக் கலைக்கு உண்டு. அவ்வகையில் இயக்கங்களையும் இயக்கும் வல்லமையைக் கொண்டமைந்த நாடகக் கலை இந்திய விடுதலை இயக்கத்திற்காக மேடையில் ஏற்படுத்திய புரட்சி வியப்பிற்குரியது.