ரயில் தடத்திலிருந்து நகர துவங்கியது. காட்சிகள் பின்னகர்ந்து சென்றன. காற்றின் பேரிரைச்சல் முகத்தில் மோதி விலக, ரயிலில் இருந்து பார்க்கையில் நகரம் மிகச்சிறியதாக வம்புகள் ஏதுமற்ற நல்லப்பிள்ளையைப்போல காட்சியளித்தது. விரையும் ரயிலிலிருந்து பார்க்கையில் எதுவொன்றும் துன்புறுத்தக்கூடியதாக தெரியவில்லை. தடமெங்கும் கிளைவிரித்தாடும் மரங்கள், வெகு தொலைவில் ஆர்பரித்துக்கொண்டிருக்கும் நீல பெருங்கடல், அதன் நுனியை தழுவி கிடக்கும் மணற்பரப்பு, உடன் பறந்து வரும் சில பறவைகள், ஆங்காங்கு காற்றில் நீந்தும் பட்டங்கள், அதனை கீழிருந்து | பிடித்தலையும் சிறார்கள் என ரயில் காட்சிகள் யாவும் மனதினை குளுரூட்டியபடி இருந்தது, பட்டம் விரட்டும் சிறார்களை கண்டதும் என் மனம் பரபரப்படைந்தது. என் பால்யத்தின் நீட்சி. என் தற்காலத்தில் நான் தப்பவிட்ட நினைவுத் திரட்டுகளின் உதிரம் மண்ணில் முளைத்து இக்காலத்தில் பட்டம் விரட்டுவதாக ஒரு கற்பனை. என் கண் வளையத்திலிருந்து மறைய இயலமால் தவிக்கும் அந்த காகித பறவைகளை தாவி பிடித்துவிட மூளை உந்துகிறது. என் உயிரை அறுத்துக்கொண்டு பட்டத்துடன் பட்டமாக கீழிறங்காது வானில் அலைந்தாட வேண்டும். இன்னும் வெகு தொலைவில் இருந்து இந்த நகரத்தைப் பார்க்க வேண்டும். மேலும் மேலும் மேன்மையுற்றதாக, பாவம் நீங்கியதாக இருப்பதை தரிசிக்க முடியும், விமானத்தில் பறப்பவனுக்கு நிலம் என்பது காட்சி பொருளாகிவிடுகிறது. தரையில் நடப்பவன் கல் தடுக்கி விழத்தானே செய்வான். நான் விழுந்துக்கொண்டே இருக்கிறேன்.
- Edition: 1
- Year: 2020
- ISBN: 9789388133524
- Format: Paper Back