அரசூர் வம்சம், விஸ்வரூபம், அச்சுதம் கேசவம் நாவல் வரிசையின் நிறைவுப் பகுதி. இரண்டாயிரம் பக்கங்களுக்கு நீண்டுசெல்லும் நூற்றாண்டுகாலப் பெருங்கடல் இது. ஒவ்வொரு துளி நீரும் ஒரு கடல்தான் என்பதால் பல நூறு குறுங்கதைகளின் திரட்சியாகவும் இந்தப் பெரும் புதினத்தை ஒருவர் ரசிக்கமுடியும். அம்பலப்புழையில் தொடங்கி லண்டன் வரை விரிந்துசெல்கிறது கதையின் களம். நம் உலகைச் சேர்ந்த நூற்றியிருபதுக்கும் மேற்பட்ட மாந்தர்களோடு தர்க்கத்துக்குப் பிடிபடாத அமானுஷ்ய உலகைச் சேர்ந்த ஆவிகளும் இயல்பாக இங்கே ஒன்று கலக்கின்றன. கரையைத் தீண்டியும் விலகியும் ஓடும் அலையைப் போல் மாய யதார்த்தம் நம் உலகையும் உணர்வையும் சீண்டி விளையாடுகிறது. இந்த ரசவாதம் நிகழும்போது நிஜத்துக்கு ஓர் அசாதாரணமான தன்மை ஏற்பட்டுவிடுகிறது; அசாதாரணம் இயல்பாகிவிடுகிறது. காலம், மொழி, மதம், பிரதேச எல்லை கடந்த ஒரு மானுடக் கதையை இந்த நாவல் பேசுகிறது. ஆணாகவும் பெண்ணாகவும் ஆவியாகவும் தோன்றுவது ஒருவரே. கடந்த காலம் முழுக்க இறக்காததால் அதுவே நிகழ்காலமாகவும் தோன்றுகிறது. கண்களுக்குப் புலப்படாமல் வளரும் கிளைகளே வேர்களாக பலம்பெறுகின்றன. ஒரே நிகழ்வுதான் நிஜமாகவும் சமயத்தில் சொப்பனமாகவும் காட்சியளிக்கிறது. புனைவு, நிஜம், தொன்மம், படிமம், நிழல் அனைத்தையும் தொட்டுப் பிசைந்து ஓர் அசாதாரணமான புதிய உலகை இந்நாவலில் சிருஷ்டிக்கிறார் இரா. முருகன். மனதை வருடும் ஒரு புதிய வாசிப்பனுபவத்தை இந்நாவல் உங்களுக்கு அளிக்கப்போவது திண்ணம். நவீன தமிழ் இலக்கியத்தில் இது ஒரு புதிய பாய்ச்சல்.1953 ஆகஸ்ட் 28 அன்று பிறந்தார். நூறுக்கும் மேற்பட்ட சிறுகதைகள், ஐந்து நாவல்கள், ஒரு கவிதைத் தொகுப்பு, தகவல் தொழில்நுட்பம் குறித்த இரண்டு புத்தகங்கள், இரண்டு தொகுப்பு நூல்கள் மற்றும் ஏராளமான கட்டுரைகள் எழுதி உள்ளார். மலையாளத்தில் இருந்து தமிழுக்குக் குறிப்பிடத்தக்க மொழிபெயர்ப்புகள் செய்துள்ளார். இவரது பல படைப்புகள், ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. கதா விருது, இலக்கியச்சிந்தனை விருது, திருப்பூர் தமிழ்ச் சங்க விருது, லில்லி தேவசிகாமணி விருது உள்பட பல்வேறு விருதுகள் பெற்றுள்ளார்.
- Edition: 01
- Published On: 2016
- ISBN: 9788184937053
- Pages: 536
- Format: Paperback