மஞ்சள் நிற உலோகத்தின் மீதான ஐரோப்பியர்களின் ஈர்ப்பு கீழை நாடுகளின் மர்மங்களுக்குள் பெனுவாவை நுழையச் செய்திருந்தது. உலகின் மேல் கோடியிலிருந்து ஸ்பானியர்கள் மூட்டைகளில் நிறைத்து வரும் தங்கத்தின் எடை தாளாமல் கப்பல்கள் பெருங்கடலுக்கு இரையாகும் கதைகளை அவனும் அறிந்திருந்தான். மேற்குலக நாடுகளின் இரசவாதிகள் தங்கத்தின் மீது அளவுகடந்த பிரேமை உடையவர்களென்றும் கீழைத்தேய இரசவாதிகளோ அதைத் தன் மலத்திற்கு ஒப்பாய் நினைப்பவர்களென்றும் தன் ஆசிரியர் சொல்ல அவன் கேட்டிருக்கிறான். உண்மையில் தன் ஆய்வுகளினூடாக அவன் அனுமானித்திருந்த கருதுகோள் ஒவ்வொரு பொருளும் அதன் மூலக்கூறு எண்ணிக்கைக்கு ஏற்ப பிறிதொன்றாய் மாற்றமடையும் என்பதாகும். ஆகவே சில சமயம் தன் தேடலே தெய்வநிந்தனையோ என்ற ஐயம் அவனுக்கு எழும். ஏனெனில் தன் ஆய்வுகளின் இறுதியில் உயிரைத் தோற்றங்கொள்ளச் செய்யும் மூலக்கூறுகளின் எண்ணிக்கையைக் கண்டடைவோம் என அவன் நம்பியிருந்தான். இருப்பினும் படைப்பின் மூல ஊற்று ஒரு மானுடனின் அறிதிறன் வரம்பிற்குட்பட்டதா என்ற ஐயமும் அவனுக்கு எழும். சில சமயம் இவையனைத்தும் வெற்றுப் பகல் கனவென்று கூட அவனுக்குத் தோன்றும். அவை மானுடகுலத்தின் வீணான எத்தனிப்புகளென்றும் இதோ தன் முன் வெற்றுடலோடு நிற்கும் பனைமர நிறமுடையவனும் வெறும் தன் மாயைகளின் புலனுரு மட்டுமே எனக் குழம்பி நிற்பான். உச்சரிக்கும் போதே இரசவாதிகளை வசியமுறச் செய்யும் பொற்பனையான் எனும் அவனது பெயரும்.
(பொற்பனையான் கதையிலிருந்து)
- Edition: 1
- Published On: 2023
- Pages: 160
- Format: Paper Cover