அமரர் கல்கியின் இயற்பெயர் ரா. கிருஷ்ணமூர்த்தி. 1899ல் தஞ்சை மாவட்டம், புத்தமங்கலத்தில் பிறந்தார். ‘நவசக்தி’ பத்திரிகையில் துணை ஆசிரியராகத் தமது பத்திரிகை உலக வாழ்க்கையைத் தொடங்கினார். பின்னர், எஸ். எஸ். வாசன் அழைப்பின் பேரில் ‘ஆனந்த விகடன்’ பொறுப்பாசிரியரானார். பிறகு சொந்தமாக அவரே ‘கல்கி’ வார இதழைத் தொடங்கி, அதன் ஆசிரியராகவும் இருந்தார். தமிழில் சரித்திரக் கதைகளின் முன்னோடி. இவரது ‘சிவகாமியின் சபதம்’, ‘பொன்னியின் செல்வன்’, ‘பார்த்திபன் கனவு’ போன்ற சரித்திரக் கதைகள் அக்காலத்தில் வாசகர்களின் மனத்தில் இதிகாசம் போலவே இடம் பெற்றன. இன்றளவும் வாசகர்களால் பெரிதும் விரும்பப்படும் ‘பொன்னியின் செல்வன்’ 1950 - 1955 ஆண்டு வரை கல்கி வார இதழில் தொடர்கதையாக வெளியாகி, மிகுந்த வரவேற்பைப் பெற்றது. பிரசித்தி பெற்ற இந்த வரலாற்றுப் புதினம் கி.பி. 1000ம் ஆண்டு காலக் கட்டத்தில் அரசோச்சிய சோழப் பேரரசை அடிப்படையாகக்கொண்டு எழுதப்பட்டது. 1954, டிசம்பர் 5ம் தேதி, தமது 55வது வயதில் கல்கி காலமானார். கல்கியின் எழுத்துகள் 1999ம் ஆண்டு தமிழக அரசால் நாட்டுடைமை ஆக்கப்பட்டன.பொன்னியின் செல்வன் என்பது இராஜராஜ சோழனுக்கு வழங்கப்பட்ட பட்டப்பெயர்களுள் ஒன்று, அருள்மொழிவர்மருடைய பெயராக கல்வெட்டுக்களில் காணப்படுவது இராஜகேசரி வர்மன் அல்லது மும்முடி சோழ தேவன் என்பது. பொன்னியின் செல்வன் வரலாற்றுப் புதினத்தின் கதாநாயகனாக வாணர் குல வீரன் வல்லவரையன் வந்தியத்தேவனை கல்கி அவர்கள் தேர்ந்தெடுத்தார்; வந்தியத்தேவனைப் பற்றிய கல்வெட்டுக் குறிப்புகள் தஞ்சைப் பெரிய கோயில் கிடைக்கின்றன. இராஜராஜ சோழரின் தமக்கையும் வல்லவரையர் வந்தியத்தேவரின் மனைவியுமான ஆழ்வார் பராந்தகை குந்தவையார் என்று கல்வெட்டுக்களில் பொறிக்கப்பட்டுள்ளது. கல்கி மேலும் K.A. நீலகண்ட சாஸ்திரியின் சோழர்கள் புத்தகத்தையும், T.V. சதாசிவப் பண்டாரத்தாரின் பிற்காலச் சோழர் சரித்திரத்தையும் மையமாக வைத்து பொன்னியின் செல்வனை எழுதினார். இதில் பிற்காலச் சோழர் சரித்திரத்தில் வந்தியத்தேவனைப் பற்றிய ஐந்து வரிகள் காணப்படுகின்றன. இதனை மையமாக வைத்தே வந்தியத்தேவனை பொன்னியின் செல்வனின் கதாநாயகனாக கல்கி வைத்தார்.
- Edition: 01
- Published On: 2011
- ISBN: 9788184934267
- Pages: 2697
- Format: Paperback