“பாலிதீன் பைகளுக்கு அகண்ட காலநீட்சி, கிளைவிரித்து வனம்போல் பரவுந்தன்மை, குவியலான கதாமாந்தர்கள், தத்துவதரிசனம், வரலாற்றுப் பின்புலம் என கலைப்படைப்புக்கான சகலகூறுகளும் இருக்கின்றன.
நாவலின் கதை பிறந்து வளர்ந்த மண்ணின் மேல் விதையூன்றி துளிர்த்து மரமாகி இந்தியா முழுமைக்குமன்றி, சீனா, பாகிஸ்தான், பங்களாதேஷ் என விஸ்தீரனமாக வேர்பரப்பிச் செல்வதும்தான் நுட்பமெனில் ஆசிரியரே சொல்வதுபோல ஒரு நூற்றாண்டின் அவலக் குறியீடாக பாலிதீனை எடுத்துக்கொண்டதும் பல இடங்களில் தெறிக்கும் கவித்துவமான மொழிநடைப் பிரயோகமும் என இவ்வாறு குறிப்பிட்டுச்சொல்ல எண்ணற்ற அம்சங்கள் விரவிக்கிடக்கின்றன.