கடல்புரத்தில், பரபரப்பூட்டும் சம்பவங்களும் கிளர்ச்சி தரும் காட்சிகளும் கொண்ட நாவல் அல்ல. ஆனால், இது ஒரு நல்ல நாவல். கலைத்தன்மை நிறைந்த உயர்வான நாவல். படித்தவர்கள் மனத்தில் பல காலத்துக்கு அழுத்தமாக நிற்கக்கூடியது. இதன் கதாபாத்திரங்கள் இயல்பாக வளர்ந்து, இயல்பாகப் பேசி, இயல்பாக நடந்து, இயல்பாகவே நம் மனத்தில் இடம் பிடித்துக் கொள்கிறார்கள்.ஒரு தேர்ந்த சிறுகதையைப்போல போராட்டத்துடன் தொடங்குகிறது நாவல். அனாதி காலமாகத் தந்தைகளுக்கும் மகன்களுக்கும் இடையில் நிலவிவரும் நெருடல், உள்ளார்ந்த இணக்கமின்மை என்ற இழைகளோடு மின்னல் வெட்டு போன்ற சம்பவத்துடன் முழு வீச்சோடு ஆரம்பமாகிறது. ஆனால், போகப் போக நெருடல்களும் கோபங்களும் அமிழ்ந்துபோக, கடல்புரத்து மக்களின் ஜீவ சரித்திரம் - குரூஸ் மிக்கேல், அவன் மனைவி மரியம்மை, மகன் செபஸ்தி, இளைய மகள் பிலோமி, பணியாள் சிலுவை, பக்கத்து வீட்டுக்கார ஐசக், பிலோமியின் சிநேகிதி ரஞ்சி, பிலோமிக்குப் பிரியமான சாமிதாஸ், மரியம்மை-யின் பிரிய வாத்தி, எல்லோருக்கும் பிரியமான பவுலுப் பாட்டா இவர்களின் கதையாகி மனிதர்களின் இதயங்களில் இயல்பாகக் குடிகொண்டுள்ள மூர்க்கக்குணம் வெறித்தன்மையோடு, ஆனால் களங்கமின்றி விவரிக்கப்படுகிறது.வாழ்க்கையின் முரண்பாடான அம்சங்களை மிகவும் யதார்த்தமாகவும் தீவிரமாக எதிர்க்க வேண்டிய அம்சங்களை மென்மையாகவும் சாத்தியமே என ஏற்றுக்கொள்ளும்படி சொல்லுகிறது இந்த நாவல். விஷயத்தை-விட, சொல்லும் முறையில் அபூர்வமான கலைத்தன்மை பூரணம் பெறுகிறது. இந்த நாவலின் சிறப்பு அம்சமே இதன் பாஷைதான். மென்மையும் குளுமையும் உயிர்த் துடிப்பும் கொண்ட பாஷை. எதையும் சாதிக்கவல்ல பாஷை, இந்த நாவலையும் ஸ்தாபிக்கிறது.இன்னும் பல காலத்துக்குக் கடல்புரத்தில் சிறந்த நாவலாகவே இருக்கும்.- சா. கந்தசாமி
- Edition: 01
- Published On: 2008
- ISBN: 9788183689328
- Pages: 112
- Format: Paperback