18வது அட்சக்கோடு

₹142 ₹150 (5% Off)

(Free shipping for orders above ₹500 within India)

18 அவது அட்சக்கோடு ஒரு குறிப்பிட்ட வகையில் வரலாற்றைப் பார்க்கும் கதை. ஒரு முக்கியமான வரலாற்றுநிகழ்வின்போது நீங்கள் என்ன செய்தீர்கள் என்று பார்த்தால் அந்தக்கதையின் முக்கியத்துவம் தெரியும். நாம் அந்த வரலாற்று நிகழ்வில் சென்று முட்டிக்கொள்வதுவரை எதையுமே கவனிக்காமல் நம் அன்றாட எளிய வாழ்க்கையை வாழ்ந்துகொண்டு இருந்திருப்போம்.எல்லீ வீசலின் இரவு தன்வரலாற்று நாவலில் இதே விஷயம் வருகிறது. ஹிட்லரின் படுகொலை முகாம்களில் என்ன நடக்கிறது எனத் தெரிந்த ஒருவன் திரும்பிவந்து போலந்தின் யூதக்குடியிருப்புகளில் அதைச் சொல்கிறான். எவருமே பொருட்படுத்துவதில்லை. எளிய மனிதர்களால் வரலாற்றை கற்பனைசெய்ய முடியவில்லை. கற்பனை செய்தாலும் என்ன செய்வதென்று புரியவில்லை. அன்றாட வாழ்க்கையில் ஈடுபடுவதற்கு மட்டுமே அவர்கள் பழகியிருக்கிறார்கள். வரும்போது பார்க்கலாம் என்று அவர்கள் வாழ்கிறார்கள்.18 ஆவது அட்சக்கோடு காட்டுவது இந்திய தேசிய விடுதலையின் ஒரு முக்கியமான வரலாற்றுச் சந்தர்ப்பம். ஹைதராபாத் நிஜாம் பாகிஸ்தானுடன் இணைய அல்லது தனித்தியங்க விரும்புகிறார். அதன்பொருட்டு மதவெறி தூண்டிவிடப்படுகிறது. நெருக்கமானவர்கள் கூட சட்டென்று மதவேற்றுமை பாராட்டி எதிரி ஆகிறார்கள். ரசாக்கர்களின் அடிதடி அரசியலுக்கு அஞ்சி மக்கள் அனாதைகளாக தப்பி ஓடுகிறார்கள். எங்கும் அச்சம், பதற்றம். இந்திய ராணுவம் வந்ததும் நிலைமை தலைகீழாகிறது. அஞ்சியவர்கள் தலைதூக்க அடிதடியில் அலைந்தவர்கள் அஞ்சி ஓடும் நிலைமை.நவீன இந்திய அரசியல் தேசிய உருவாக்கத்தில் ஒரு திருப்புமுனை தருணம் அது. பிற மகாராஜாக்களுக்கும் பிராந்திய ஆதிக்கங்களுக்கும் முன்னுதாரணமான அச்சுறுத்தலாக விளங்கியது அந்நிகழ்ச்சி. அது நிகழவில்லை என்றால் இந்தியா முழுக்க இன்னும் பல பிரிவினைக்குரல்கள் கிளம்பி குட்டையை மேலும் குழப்பியிருக்கும். பல இடங்களில் அதேபோல வன்முறைக் கலவரமும் பிரிவினைப்போக்கும் ஒரேசமயம் தலையெடுத்திருந்தால் இந்தியராணுவம் செயலற்றிருக்கும். பெரும் மானுட அழிவுகள் நிகழ்ந்திருக்கும். அந்த வடுக்களை ஆற்ற முடியாமல் சுதந்திர இந்தியா மேலும் அழிவை நோக்கிச் சென்றிருக்கும். சிறந்த உதாரணம் தெலுங்கானாவும், திருவிதாங்கூரும். நல்லவேளை நாயர்கள் திருவிதாங்கூர் மகாராஜாவை நம்பவில்லை. காரணம் திவான் ஒரு அய்யர். நாயர்கள் நம்பி ஆயுதமெடுத்திருந்தால் திருவிதாங்கூரிலும் கலவரம் நடந்திருக்கும்அவனைச்சுற்றி இத்தனை வரலாறு நடக்கும்போதும் சந்திரசேகரன் கிரிக்கெட் தான் விளையாடிக்கொண்டிருக்கிறான். கன்யாகுமரியில் இருந்து கிளம்பி, சென்னை வரை ஓடி, டெல்லியில் இருக்கும் ஸ்டம்பை நோக்கி எறிவதாக உத்தேசித்து கராச்சிக்கோ டாக்காவுக்கோ பந்தை விட்டெறிந்துகொண்டிருக்கிறான் . அவன் அப்பா வழியில் சிங்கம் வந்து உறுமினாலும் ’நான் ரெயில்வே செர்வெண்ட்’ என்று சொல்லிக்கொண்டிருக்கிறார். வீட்டுக்கு வெளியே நிகழ்பவை அவர்களுக்கு மெல்லிய அதிர்வுகளாக மட்டுமே வந்து சேர்கின்றன. நிலைமை சூடாகும்போதுகூட முடிந்தவரை வாழ்ந்து பார்க்கலாம் என்றே நினைக்கிறார்கள்.அவர்களுக்குள் வன்முறை இல்லை. ஆகவே வன்முறை தங்களை பாதிக்காது என்ற அசட்டு நம்பிக்கை. பிரச்சினை என்றால் எங்காவது பதுங்கினால் போயிற்று என்கிற தலைமுறை தலைமுறையாக பயின்று வைத்திருக்கும் மனநிலை.இன்னொருபக்கம் நைஜாமின் அரசகுலப்பின்னணியைச்சேர்ந்த உயர்குடிகளும் அவர்களின் சொகுசு வாழ்க்கையில் எந்தச்சிக்கலும் இல்லாமல் வாழ்கிறார்கள். அவர்கள் வரலாற்றைப் பொருட்படுத்துவதே இல்லை. அது அவர்கள் வரை வந்து தொடாது என்று நினைக்கிறார்கள். சந்திரசேகரனுக்கு வரலாறு தலைக்குமேல் நிகழ்கிறது அவர்களுக்கு கால்கீழே ஓடிக்கொண்டிருக்கிறதுஅசோகமித்திரனின் நாவல் பொதுவரலாற்றை ஒரு சரடாகவும் சாமானியர்களின் சாமானிய வாழ்க்கையை ஒரு சரடாகவும் பின்னிக்கொண்டே செல்கிறது. இரண்டுக்கும் பெரிய தொடர்பேதும் இல்லை. சட்டென்று ஒரு கட்டத்தில் சந்திரசேகரன் வரலாற்றில் முட்டிக்கொள்கிறான். அதுவே உச்சகட்டம் மதமோ அரசியலோ இல்லாத எளிய மாணவனாகிய சந்திரசேகரனில் அவனுடைய அன்றாட வாழ்க்கை பிரச்சினைக்குள்ளாகும்போதுதான் அரசியல் குடியேறுகிறது.அதுவும் எளிமையான அரசியல். பணம் உள்ளவர்கள் அதிகாரத்தைக்கையாளும் விதத்தைப்பற்றிய ஒரு பிரக்ஞையாக மட்டும் அந்த அரசியல் நீடிக்கிறது. அவனுடைய சூழலே இந்து- முஸ்லீம் என பிரிவுபடும்போது கூட அவன் சையது மாமாவை நம்பிக்கொண்டு மதவெறுப்புக்கு அப்பால்தான் வாழ்கிறான். காந்தி கொலை செய்யப்பட்ட தகவல் கிடைக்கும்போது அந்தக்கொலையை ஒரு முஸ்லீம்தான் செய்திருப்பான் என ஊகித்து சந்திரசேகரன் கொலைவெறி கொண்டு ஒரு மைதானத்தில் ஓடும் காட்சி அவன் எப்படி அரசியல்படுத்தப்படுகிறான் என்பதைக் காட்டுகிறது.அவனே உள்ளூர மதத்துருவத்தை நோக்கி தள்ளப்பட்டிருக்கிறான். அந்த தருணத்தில் கொன்றது முஸ்லீம் என அவன் இயல்பாக நம்புவதே அதற்குச் சான்று காந்தியை தன்னுடைய கையாலாகாத எளிமையின் அடையாளமாகவே அவனும் அவனைப்போன்ற நடுத்தர வர்க்கத்தினரும் காண்கிறார்கள். அவர் கொல்லப்படுவது அவர்களின் கடைசி எல்லை. விழுமியங்களுக்கும் பணிந்துபோவதற்கும் மதிப்பே இல்லை என அவர்களுக்கு காட்டுவது அது. சந்திரசேகரன் கையாலாகாதவனாகத்தான் இருளில் ’காந்தீ காந்தீ ’ என கூச்சலிடுகிறான். ஆனால் அந்த அரசியல்படுத்தப்படலின் மறுபக்கத்தை உடனே காட்டி நாவல் முடிகிறது.இந்துக்கள் திரும்ப அடிக்கும்போது அடிவாங்குவது பணக்கார நைஜாம் வம்சம் அல்ல. எளிய அன்றாடங்காய்ச்சி முஸ்லீம்கள். அவர்களின் கந்தைக்குடிசைகள். யார் யாருடன் சண்டையிட்டாலும் அந்த குடிசைகள்தான் எரிந்தாகவேண்டும். இந்துக்குடிசை அல்லது இஸ்லாமிய குடிசை. ஆனால் அது குடிசைதான் எப்போதும். எங்கிருந்தோ வந்து உயிருக்குப் பயந்து ஒளிந்திருக்கும் அந்த எளிய இஸ்லாமியக்குடும்பத்தின் பெண் உயிரச்சத்துடன் வந்து சட்டையை கழட்டி ’என்னை எடுத்துக்கொள் என் குடும்பத்தை விட்டுவிடு’ என கூறும் இடத்தில் சந்திரசேகரன் உடைந்து விடுகிறான். அந்த கணத்தில் அவன் அவனுடைய அரசியல் பிரக்ஞையை மீறி அறப்பிரக்ஞையை அடைகிறான். அதுவே இந்நாவலின் உச்சம்இந்த மூன்று புள்ளிகளும் முக்கியமானவை. காந்திகொலையில் சந்திரசேகரன் மதம் சார்ந்த திரள் அடையாளத்தை அடைகிறான். அதன் கோபங்களையும் வெறுப்புகளையும் பகிர்ந்து கொள்கிறான். எளிய தனிமனிதனாக இருந்தவன் அரசியல்சுயம் கொள்கிறான்இரண்டாவது புள்ளியில் அந்த அரசியல் சுயம் எத்தனை செயற்கையானது என உணர்கிறான். அவனறிந்த யதார்த்தம் அந்த குடிசை வாசிகளும் அவனும் ஒன்றே என்பதுதான். எந்த அரசியலும் அவர்களுடையவை அல்ல. அவையெல்லாம் வீடும் சோறும் உள்ளவர்களுடையவை. அவர்கள் எல்லாரும் அதற்குகீழே வாழ்பவர்கள். தன்னை அவன் அம்மனிதர்களின் ஒருவனாக, வரலாறெங்கும் நிறைந்திருக்கும் சாமானியனாக காண்கிறான் சந்திரசேகரன்.மூன்றாவது புள்ளியில் அவன் தன் ஆழத்து அற உணர்ச்சியைக் கண்டுகொள்கிறான். அவன் ஏதும் செய்யவில்லை. ஆனால் அந்த எளிய பெண் அவனை அவள் எதிரியாக எண்ணி விட்டாள். எண்ணும் இடத்தில் அவன் இருக்க நேர்கிறது. அந்த அடையாளம் அவனுக்கு இருக்கிறது. அதுவேகூட பாவம் என அவன் உணர்கிறான். அந்த அடையாளத்தில் இருந்து விடுபட்டு மீண்டும் தனியனாக ஆகி அவன் ஓடும்போது அவனுடைய அறம் முழுமை அடைகிறது. இனி எந்த திரளிலும் அவனால் இணைய முடியாது. அவன் தன் அறவுணர்ச்சியுடன் தனித்தே வாழப்போகிறவன்இந்த பரிணாமத்தைச் சொல்லும் முக்கியமான படைப்பு 18 ஆவது அட்சக்கோடு. அதை மிக நுட்பமாக நகைச்சுவையாக சாதாரணமாகச் சொல்லிச்செல்கிறார் அசோகமித்திரன். ‘நான் ஏதும் செய்யவில்லை. ஆனால் இவை எல்லாவற்றுக்கும் நானும் கூட்டுப்பொறுப்புள்ளவன்’ இந்தவரியை அசோகமித்திரனின் ஆக்கங்களில் மீண்டும் மீண்டும் காணலாம். ஹிட்லரின் வதைமுகாம்களை, இலங்கைச்சிறையின் படுகொலைகளை, மதக்கலவரங்களை அப்படி உணரக்கூடிய சாமானியர்களின் அகக்கொந்தளிப்புகளை அற்புதமாக விவரிக்கும் கதைகளை அவர் எழுதியிருக்கிறார்.இந்திய இலக்கியத்தில் ’சாமானியனின் அறப்பிரக்ஞை’ என்ற இந்த அம்சம் அசோகமித்திரன் ஆக்கங்களில் வெளிவந்த அளவுக்கு நுட்பமும் தீவிரமுமாக எவர் ஆக்கத்திலும் வெளிப்பட்டதில்லை. உலக இலக்கியத்திலேயே குறைவுதான். நான் ஐசக் பாஷவிஸ் சிங்கரை மட்டுமே அவருக்கு நிகராகச் சொல்வேன்இன்று சதத் ஹசன் மாண்டோவைத் தமிழில் சிலர் திடீரென்று தூக்கிப்பிடிக்கிறார்கள். மொழிபெயர்ப்பின் மூலம் கண்டுவிட்டார்களாம். மாண்டோவோ அல்லது பீஷ்ம சாஹ்னியோ [தமஸ்] எழுதியவை அதிர்ச்சியூட்டும் புறச்சித்தரிப்புகள், செயற்கையான நாடக உச்சங்கள். ஒவ்வொரு தனிமனிதனும் தன் ஆன்மாவின் ஆழத்தால் அடையாளம் காணும் வாழ்க்கைத்தருணங்கள் அல்ல அவை.அசோகமித்திரன் எழுதுவதும் நாமனைவரும் அறியும் நமது ஆழத்தை கண்முன், நம் சமகாலத்தில், இலக்கியமேதை ஒருவர் தன் மகத்தான ஆக்கங்களுடன் வாழ்கிறார். நாம் தொலைநோக்கி வைத்து திசைகளை துழாவிக்கொண்டிருக்கிறோம் .-ஆர்விபுத்தகம் படிக்கும் வழக்கம் சிறுவயது முதலிருந்தாலும், இணையத்தின் மூலமாகத்தான் பல நல்ல எழுத்தாளர்கள், புத்தகங்கள் அறிமுகமானர்கள். சிலிக்கான் ஷெல்ப், ஜெயமோகன் இவர்களின் தளத்தில் பல புத்தக விமர்சனம், அறிமுகம் கிடைக்கப்பெற்றேன். அதே போல் புத்தகம் வாங்குவதும் பெரிய சவாலாக இருந்து. பெங்களூரில் தமிழ் புத்தகத்தை எங்குவாங்குவது. ஹிக்கின்பாதம்ஸில் சமையல் கலைதான் கிடைக்கின்றது. அதற்கும் இணையம் தான் துணை. கிழக்குப்  பதிப்பகத்தின் செயல்பாடு மிகச்சிறந்தது.அசோகமித்திரனின் பெயரைக் கேட்டிருந்தாலும் அவரின் புத்தகங்கள் எதையும் படித்ததில்லை, புத்தகங்களைப் பற்றியும் கேள்விபட்டதில்லை. அவரின் தி.ஜாவை பற்றிய பேட்டியை சொல்வனத்தில் படித்து கொஞ்சம் எரிச்சலாகக் கூட இருந்தது. அதோடு அவரின் கதைகள் சீரியஸாக இருக்குமோ என்ற எண்ணம் வேறு. 18வது அட்சக்கோடு பற்றி பலரும் பேசுவதைக் கேட்டுத்தான் வாங்கினேன். எப்புத்தகத்தையும் வேகமாக பல முறை படிப்பது என் வழக்கம். முதலில் புத்தகத்தை முடிக்க வேண்டும் என்ற வெறி. பின்னர் மெதுவாக பல முறை படிப்பதுண்டு.முதல் முறை படிக்கும்போது அவரின் எழுத்து மீது இருந்த தயக்கம் போனது. சின்ன சின்ன வாக்கியங்களில் கதையை சொல்லி சென்றது மிகவும் பிடிந்திருந்தது. சில இடங்களில் இரண்டு மூன்று பக்கங்கள் தொடர்ச்சியாக இருந்தாலும் சோர்வடைய வைக்கவில்லை.18வது அட்சரேகையில் அமைந்திருக்கும் ஒரு நகரத்தின் கதை. இந்தியாவிற்கு சுதந்திரம் கிடைக்கப்போகும் தருணத்தில் ஆரம்பிக்கும் கதை காந்தியின் மறைவையொட்டி முடிகின்றது. ஒருவன் கல்லூரி சிறுவனாக ஆரம்பித்து மெதுவாக முதிர்ச்சியடைந்த ஒருவனாக மாறுவதை, நாட்டின் கதையுடன் சேர்த்து நமக்கு கூறுகின்றார். நாட்டின் பிரிவினை மற்றும் சேர்க்கையை பற்றி பேசுவதால், புவியியல் ரீதியான தலைப்பை தந்துள்ளார் போலஇந்தியாவை விட்டு பிரிட்டிஷார் போகும் போது நாம் பார்க்கும் முழு இந்தியாவாக விட்டு செல்லவில்லை. ஆங்காங்கு பழைய மன்னர்கள் தனியாக செல்ல நினைத்தனர். வல்லபாய் படேல் என்னும் இரும்பு மனிதர் அனைத்துவித முறைகளை முயற்சித்து இன்றைய இந்தியாவை உண்டாக்கினார். அப்படி போர்க்கொடி உயர்த்திய நிஜாம், இந்தியாவை எதிர்த்து பின் அடிபணிந்த காலகட்டத்தை நாவலின் பின்புலமாக வைத்து, ஒரு கல்லூரி சிறுவன், சிறுவன் என்ற கட்டத்திலிருந்து இளைஞன் என்ற கட்டத்திற்கு முன்னேறுவதை கூறியுள்ளார்.நிஜாம் தான் ஒரு இஸ்லாமியர் என்ற காரணத்தால் பாகிஸ்தானுடன் நட்பு பாராட்டி இந்துக்கள் பெரும்பானமையாக இருந்த சமஸ்தானத்தை இந்தியாவுடன் இணைக்கமுன்வரவில்லை . வெளிநாடுகளிடமிருந்து ஆயுதங்கள் வாங்கி அல்லது வாங்குவதாக மக்களை நம்பவைத்து தனி நாடாக இருக்க அனைத்து முயற்சிகளையும் செய்தார். படேல் என்னும் மனிதரின் முன்பு அவரின் வேலை பலிக்கவில்லை. இந்திய அரசின் அனைத்துவித தடைகளாலும், ராணுவ நடவடிக்கைகளாலும் வேறு வழியின்றி ஆட்சியை ஒப்படைத்தார்.நிஜாம் ஒரு பெரிய கஞ்சர் என்று பிரபலம், அதுவும் புத்தகத்தில் பதிவாகியுள்ளது. அக்கால ரயில்வே உத்தியோகத்தின் பெருமை, பல நாணய முறைகள், யுந்தகால ரேஷன் முறை, என பல விஷயங்களையும் போகிற போக்கில் தெரியவைத்து செல்கின்றார். நிஜாமின் கதையை எஸ்.ராமகிருஷ்ணன் ஜூ.விகடனில் எழுதும்போது இப்புத்தகத்தை பற்றியும் எழுதியுள்ளார்.சந்திரசேகரன் இந்தியா சுதந்திரமடைந்த காலத்தில், நிஜாம் தனிநாடு கனவிலிருக்கையில், அவனும் கிரிக்கெட் கனவிலிருக்கின்றான். சந்துருவின் குடும்பம் நமக்கு ஏதும் ஆகாது என்று எண்ணிக்கொண்டு அவர்கள் வாழ்க்கையை நடத்துகின்றனர். சந்துருவின் அப்பாவின் நண்பர்களில் சிலர் மெதுவாக ஊரை காலிசெய்து போகின்றனர், சிலர் தனி நாட்டு கனவில் திரிகின்றனர், சிலர் சூழ்நிலையோடு ஒத்துபோய் வாழ நினைக்கின்றனர்.  ராஜாக்கர்களால் தாக்கப்படும் சந்துரு முதலில் அங்குள்ள நிலைமையை புரிந்து கொள்ள ஆரம்பிக்கின்றான். மெதுவாக சந்துருவின் கவனம் கிரிக்கெட்டிலிருந்து அரசியல் பக்கம் திரும்பி கல்லூரியை புறக்கணித்தல், போராட்டத்தில் இறங்குதல் என திசைமாறி, ஒரு அதிர்ச்சியை சந்தித்து வேறு பக்கம் மாறுவதை, சந்திரசேகரனின் பார்வையிலும், ஆசிரியர் பார்வையிலும் மாறி மாறி பேசுகின்றது.சந்துருவின் பழைய நினைவுகளை பேசும் போது கதை சந்துரு கூறுவதாகவும், நிகழ்கால நடப்புகள் ஆசிரியர் கூற்றாகவும் போகின்றது. அசோகமித்ரனின் சிறுசிறு வரிகளில் கதை சொல்லும் முறை மிகவும் பிடித்துவிட்டது, அத்துடன் அங்கங்கு இழையோடும் நகைச்சுவை. சந்துருவின் பால்யகால நினைவுகளில் வரும் நண்பர்கள் எதிரிகள், ஒரு சிறுவனின் மனப்பான்மையை அப்படியே காட்டுகின்றார். சந்துருவின் மேடை நாடகம் ஏனோ சுஜாதாவின் வீரசிம்மன் நாடகத்தை நினைவுபடுத்தியது.அரசியல் சூழல் மெதுவாக மாறுவதை அண்டை வீட்டுகாரர்களின் மூலமாக நுட்பமாக விவரித்துள்ளார். நிஜாம் கை ஓங்கும் என எதிர்பார்த்து குரல் உயர்த்தும் அண்டைவீட்டுக்காரர், மெதுவாக மாறி ஒடுங்குவது. தமிழ் இஸ்லாமியராக இருந்து உருது பேசும் மற்ற இஸ்லாமியர் போல மாற முயற்சி செய்யும் சந்துருவின் அப்பாவின் இஸ்லாமிய நண்பர், உரக்க வீர வசனம் பேசி ஓடி ஒளியும் நரசிம்ம ராவ், எதைப் பற்றியும் கவலையின்றி மரத்தில் தொங்கும் சட்டைக்காரன், அவனின் சகோதரிகள் என அனைத்து கதாபாத்திரங்களையும் மறக்க முடியாததாக்குகின்றார்கடைசி காட்சி மனதை நிறைய தொந்தரவு செய்கின்றது. அனைத்து மனிதனிடமும் அடிப்படையில் கொஞ்சமாவது மனிததன்மை இருக்கும், பல காரணங்களால் அது மறைந்து வேறுதுவேஷம் மேலோங்கி நிற்கும். ஆனால் அந்த மனிதத்தன்மை அவனிடம் எப்போதும் இருக்கும், அதை தூண்டிவிட எதாவது ஒன்று தேவை, அதை எப்போது அணையவிடாமல் வைத்திருக்க அவனது சுற்றமும் சூழலும் சரியாக இருக்க வேண்டும். சந்துரு பல நிகழ்ச்சிகளால் மறந்த அந்த உணர்ச்சி அந்த கடைசி நிகழ்ச்சியில், அந்த அதிர்ச்சியால் தூண்டப்படுகின்றது.நாட்டின் மதத்தின் பெயராலும், ஜாதியின் பெயராலும் கலவரம் ஏற்படும் போது உண்மையில் பாதிக்க படுபவர்கள் ஒன்றுமறியா அப்பாவிகள்தான். ஒரு மதத்தை சேர்ந்தவன் இன்னொருவனை அடித்தான் என்றால் பதிலுக்கு அடிபடுவர்கள் அடித்தவனல்ல வேறு எவனோ ஒருவன். மதம், ஜாதி என்று எதைப் பற்றியும் கவலைப்படாமல் அடுத்த வேளையை பற்றி மட்டும் யோசிக்கும் மக்கள்தான் மாட்டிக்கொள்கின்றார்கள்.இது ஒரு சிறந்த கதை என்றெல்லாம் அசோகமித்திரனுக்கு சர்டிஃபிகேட் தருமளவிற்கு எனக்கு தகுதியில்லை. ஆனால் எனக்கு மிகவும் பிடிதிருந்தது என்று கூறலாம். ஒரு சில புத்தகங்களை எத்தனை முறை வேண்டுமானாலும் படிக்கலாம் அந்த வரிசையில் இதுவும் சேரும்.  -ரெங்கசுப்ரமணி
  • Edition: 01
  • Published On: 2005
  • ISBN: 9788183681025
  • Pages: -
  • Format: Paperback
Share

Buy Now

(Free shipping for orders above ₹500 within India)

₹142 ₹150 (5% Off)

Notify me when back in stock

Delivery

Estimated delivery time

Books/ Articles will be shipped within 3-7 working days.

Payment

We accept All Payment Methods

With Domestic and International Credit & Debit cards, EMIs (Credit/Debit Cards & Cardless), PayLater, Netbanking from 58 banks, UPI and 8 mobile wallets, Razorpay provides the most extensive set of payment methods.

No Return

No Return Policy

Once a Book/ Articles are delivered without damage, it cannot be returned to us.

Related Books

காதுகள் OUT OF STOCK

காதுகள்

₹190 ₹200 (5% Off)
ஆழி சூழ் உலகு OUT OF STOCK
கொற்றவை (நாவல்) OUT OF STOCK

உப பாண்டவம்

₹337 ₹375 (10% Off)

கதீட்ரல்

₹209 ₹220 (5% Off)
சுளுந்தீ OUT OF STOCK

சுளுந்தீ

₹427 ₹450 (5% Off)

அருகன்மேடு

₹152 ₹160 (5% Off)

அசோகர்

₹294 ₹310 (5% Off)

சாலாம்புரி

₹380 ₹400 (5% Off)

Notify me when back in stock

By continuing, you agree to our Terms of Use and Privacy Policy

Wp Chat