Default Author

யொஸ்டைன் கார்டெர் (பி. 1952) யொஸ்டைன் கார்டெர் நார்வேயின் தலைநகரான ஆஸ்லோவில் பிறந்தார். அப்பா பள்ளித் தலைமையாசிரியர். அம்மா ஆசிரியராக இருந்தது மட்டுமன

யொஸ்டைன் கார்டெர் (பி. 1952) யொஸ்டைன் கார்டெர் நார்வேயின் தலைநகரான ஆஸ்லோவில் பிறந்தார். அப்பா பள்ளித் தலைமையாசிரியர். அம்மா ஆசிரியராக இருந்தது மட்டுமன்றிக் குழந்தைகளுக்கான புத்தகங்களையும் எழுதியவர். கார்டெர் ஆஸ்லோ பல்கலைக்கழகத்தில் ஸ்காண்டிநேவிய மொழிகளையும் இறையியலையும் கற்றார். உயர்நிலைப்பள்ளித் தத்துவ ஆசிரியராகப் பல ஆண்டுகள் பணிபுரிந்தார். குழந்தைகளின் மனப்பான்மையிலிருந்து கதைகளை எழுதும் கார்டெர் ஆச்சரியப்படுதலுக்கான அவர்களின் உணர்வில் அமிழ்ந்து போகிறவர். வெளிவந்த முதல் மூன்று வருடங்களும் தொடர்ந்து நார்வேயின் மிக அதிகமாக விற்ற நூல் என்ற சிறப்பை ‘சோஃபியின் உலகம்’ பெற்றது. 1995இல் உலகிலேயே மிக அதிகம் விற்பனையான புனைகதை நூல் என்ற தனிச் சிறப்பையும் இந்த நாவல் பெற்றது. சாராம்சத்தில் நாவல் வடிவத்தில் உள்ள ஒரு தத்துவப் பாடநூல் என்ற முறையில் இந்த அளவு விற்றது ஒரு பெரும் சாதனை. இதுவரை ஐம்பத்து மூன்று மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. மூன்று கோடிப் பிரதிகள் அச்சாகியுள்ளன. மனித உரிமைகள், சுற்றுச்சூழல், நீடித்த வளர்ச்சி ஆகியவற்றில் அக்கறைகொண்ட கார்டெர் தன்னுடைய மனைவி சிரி டேனவிக்குடன் இணைந்து சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் நீடித்த வளர்ச்சிக்கானப் பன்னாட்டு விருது ஒன்றை 1997இல் நிறுவினார். இந்த நாவலின் முக்கியக் கதாபாத்திரமான சோஃபியின் பெயரால் ஆண்டுதோறும் வழங்கப்படும் இவ்விருது ஒரு லட்சம் அமெரிக்க டாலர்களைக் கொண்டது. இஸ்ரேலின் பாலஸ்தீன ஆக்கிரமிப்பையும், லெபனானில் அந்நாடு விளைவித்த உயிர்ச் சேதத்தையும் கண்டித்து அரசியல் கட்டுரைகளை கார்டெர் எழுதியிருக்கிறார். இவர் தன் மனைவி மற்றும் இரண்டு மகன்களுடன் ஆஸ்லோவில் வசிக்கிறார்.

Read More

Read Less

யொஸ்டைன் கார்டெர் நூல்கள் Showing 1-1 of 1 items


Loading...

By continuing, you agree to our Terms of Use and Privacy Policy

Wp Chat