தமிழறிஞர்களின் அறிமுகமாக மட்டும் இந்நூல் அமையவில்லை; பல அரிய தகவல்களின் திரட்டாகவும் இருக்கிறது. ‘மெட்ராஸ்’ என்ற பெயர் எப்படி வந்தது என்ற தகவலை சே.ப.நரசிம்மலு நாயுடு தன்னுடைய நூலில் (ஆரியர் திவ்ய தேச யாத்திரை) குறிப்பிட்டிருக்கிறார். ஆதிசங்கரர், திருஞானசம்பந்தரை ‘திராவிட சிசு’ என்று குறிப்பிட்ட தகவலை முதன்முதலில் எழுதியவர் மனோன்மணீயம் சுந்தரம் பிள்ளை (திருஞானசம்பந்தர் கால ஆராய்ச்சி). சென்னை ராஜதானிக் கல்லூரியில் (மாநிலக் கல்லூரி) முதன்முதலில் எம்.ஏ. தமிழ் பட்டம் பெற்றவர் திருமணம் செல்வகேசவராய முதலியார்; பல நீதி நூல்களை (ஆசாரக்கோவை, அறநெறிச்சாரம், பழமொழி நானூறு, முதுமொழிக்காஞ்சி) இவர் பதிப்பித்துள்ளார். ‘தமிழுக்குக் கதி கம்பனும் திருவள்ளுவனும்’ என்று கூறியவர் திருமணம் செல்வகேசவராய முதலியார் என்றுதான் இலக்கிய வரலாற்றாசிரியர்கள் திரும்பத் திரும்ப எழுதிவருகின்றனர். சி.வை.தாமோதரம் பிள்ளை கலித்தொகையைப் பதிப்பித்தவராக மட்டுமே அடையாளப்படுத்தப்படுகிறார். அவர் பதிப்பித்த தொல்காப்பியம், வீரசோழியம், இறையனார் அகப்பொருள் உரை போன்ற பதிப்புகள் குறித்துப் பேசுவதில்லை. மு.இராகவையங்காரின் அத்தை மகன்தான் ரா.இராகவையங்கார்; கே.என்.சிவராஜப் பிள்ளையின் அத்தான் மனோன்மணீயம் சுந்தரம் பிள்ளை என்று சொல்லிக்கொண்டே போகலாம்.
இந்நூல்வழி மற்றொரு சுவாரஸ்யமான தகவலைத் தெரிந்துகொள்ள முடிந்தது. தமிழறிஞர்கள் பலருக்கும் ஒன்றுக்கும் மேற்பட்ட மனைவியர் இருந்திருக்கிறார்கள். சி.வை.தா.வுக்கு மூன்று மனைவியர்; பத்து பிள்ளைகள். வெள்ளக்கால் ப.சுப்பிரமணிய முதலியாருக்கு இரண்டு மனைவியர்; ஆறு பிள்ளைகள். எல்.டி.சாமிக்கண்ணுப் பிள்ளைக்கு இரண்டு மனைவியர்; பதினாறு பிள்ளைகள் என்று இப்பட்டியல் நீள்கிறது. பதினைந்து வயதில் முதல் திருமணம் செய்த நாவலர் சோமசுந்தர பாரதியார், 48-ம் வயதில் மறுதிருமணம் செய்திருக்கிறார். இதுபோன்ற தகவல்கள் புனைவை வாசிக்கும் மனநிலையை உருவாக்குகின்றன. இத்தன்மைக்கு அ.கா.பெருமாளின் மொழிநடைக்கும் முக்கியப் பங்கிருக்கிறது. தமிழறிஞர்கள் பலர் சுதந்திரப் போராட்டத்தில் பங்கெடுத்திருக்கின்றனர். சமூக மறுகட்டமைப்புக்கான பணிகளிலும் ஈடுபட்டிருக்கின்றனர். விடுபட்டுள்ள தமிழறிஞர்கள் குறித்தும் அ.கா.பெருமாள் எழுத வேண்டும். அடுத்த தலைமுறையினருக்கு இந்நூல் முக்கியமான ஒரு வரலாற்று ஆவணம்.
நன்றி: இந்து தமிழ் திசை
Reviews
There are no reviews yet.