நம் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் பாடமாக வைக்க வேண்டிய ஒரு சில புத்தகங்களில் சு.தியடோர் பாஸ்கரன் எழுதிய காட்டுயிர்கள் மற்றும் சூழலியல் சார்ந்த கட்டுரைகள் அடங்கிய “கையில் இருக்கும் பூமி” என்கிற இந்த புத்தகமும் ஒன்று.
“கொடுங்குரல் குறைத்த செவ்வாய்ப் பைங்கிளி
அஞ்சலோம்பி ஆர்பதங் கொண்டு
நின்குறை முடித்தபின்றை என்குறை
செய்தல் வேண்டுமால் கைதொழுது இரப்பல் பல்கோட் பலவின்சாரல் அவர் நாட்டு
நின்கிளை மருங்கிற் சேறியாயின்
அம்மலை கிழவோர்க்கு உரைமதி இம்மலைக்
கானக் குறவர் மடமகள்
ஏனல்காவல் ஆயினள் எனவே!”
தலைவனை பிரிந்து வாழும் தலைவி ஒரு கிளியிடம் தன் துயரத்தை பகிர்ந்து கொள்கிறாள். நம் வாழ்வானது இயற்கையோடு எவ்வளவு இணைந்து இருந்தது என்பதற்கு ஒரு எடுத்துக்காட்டு இந்த பாடல். நற்றிணயில் குறிஞ்சித் திணையில் செம்பியனார் என்கிற புலவர் எழுதிய பாடல் இது. சங்க இலக்கியம் காட்டும் வாழ்க்கைச் சூழல் யாவும் இப்படி இயற்கையோடு சேர்ந்த ஒரு மகத்தான பொற்காலம் என்று தான் தோன்றுகிறது. இத்தனைக்கும் இன்று இருப்பது போல் ஒரு நிலையான வாழ்கைய அம்மக்கள் வாழவில்லை. ஓயாத போர்கள் இடப்பெயர்வுகள் நடந்து கொண்டிருந்த காலகட்டம் அது. அப்படி இருந்தும் அவர்கள் இயற்கையைப் போற்றி பாதுகாத்து உள்ளனர்.
நம்மைச் சுற்றி இருக்கும் இந்த உலகம் மனிதர்கள் மட்டுமே வாழும் இடம் அல்ல. பல்வேறு வகையான புள்ளிணங்கள், பூச்சிகள், தாவரங்கள், விலங்குகள் இந்த பூமியை நம்மோடு பகிர்ந்து கொண்டு வாழ்கின்றன. அவர்களுக்காக வாழிடங்கள் கொஞ்சம் கொஞ்சமாக நம்மால் அழிந்து கொண்டு வருகிறது. 1947 வரை நம்மை ஆண்ட பிரிட்டிஷார் நம்முடைய இயற்கை வளங்கள் யாவயும் அடியோடு சுரண்டி விட்டார்கள். அதற்கு பிறகாவது நாம் நம்முடைய சுய அறிவை பயன்படுத்தி நம்முடைய இயற்கை வளங்களை பாதுகாத்து இருக்கலாம். ஆனால் நாம் அவர்கள் சுரண்டியதை விட பல மடங்கு அதிகமாக இன்று இயற்கையை சுரண்டி வாழ்ந்து கொண்டிருக்கிறோம். என்னுடைய சிறு வயதில் நான் பார்த்த சிட்டுக்குருவிகள், தட்டாண்கள் இப்படி பல உயிரினங்கள் நம்முடைய நுகர்வு வெறியினால் அழிந்து போய்க் கொண்டிருக்கிறது. தற்போதைய நிலவரப்படி ஒரு நிமிடத்திற்கு தென்னமெரிக்காவின் அமேசான் காடுகள் நான்கு கால்பாந்தாட்ட தளத்திற்கு இணையான அளவு அழிக்கப்படுகிறதாம். ஆப்ரிக்கக் காடுகளில் பல்லாயிரம் ஆண்டுகளாய் வாழ்ந்து வந்த வெள்ளைக் காண்டாமிருகம் மனிதனின் பேராசையாலேயே தன் கடைசி உயிரை ஆயுதம் தாங்கிய வீரர்களின் (வேட்டையர்களிடமிருந்து பாதுகாத்தனர்) பாதுகாப்பில் விட்டது.
புவி வெப்பமடைதல், குடிநீர் பற்றாக்குறை, பருவ மழை தப்பிப்போகுதல் இவை யாவும் இன்று நம்முடைய எதிர்காலத்திற்கு மிகவும் அச்சுறுத்தலாக உள்ளது. இதற்கெல்லாம் நம்முடைய மிகப்பெரிய இயற்கை வளங்கலான காடுகளை நாம் அழித்தது தான் காரணம்.
இந்த கட்டுரைகள் யாவும் நம்முடைய சுற்றுச்சூழல் குறித்த அக்கறையை அதிகப்படுத்துவது மட்டுமல்லாமல் பல புள்ளினங்கள் மற்றும் விலங்கினங்களின் தமிழ் பெயர்களை தெரிந்து கொள்ள முடிகிறது. அந்தவகையில் தமிழ் இலக்கிய உலகில் மிக முக்கியமான புத்தகமாக கருதுகிறேன்.
நம் எல்லோர் கையிலும் கண்டிப்பாக இருக்க வேண்டிய புத்தகம் “கையில் இருக்கும் பூமி”.
~ சந்திரசேகர்
Reviews
There are no reviews yet.