கல்லூரியின் வாசலில் கால் வைத்த பிறகு அறிவியல் என்னும் பூந்தோட்டத்தை ஆங்கிலம் என்ற முகமூடி அணிந்து உலா வரும் கட்டாயத்தில் உள்ள பெரும்பாலான தமிழ் உள்ளங்களுக்கு, இந்தப் புத்தகம் வீடு தேடி வரும் ஒரு இனிய தென்றல். அறிவியல் என்ற நல்மருந்திற்கு ஆங்கிலம் என்ற கசப்பை ஒதுக்கி, தேன் தமிழ் சேர்த்து கொடுக்கும் முயற்சியிது. கடினமான அறிவியல் கோட்பாடுகளை எளிமையான சொற்றொடர்கள் மூலம் கருத்து மாறாமல் சொல்லுவது என்பது மூளையைப் பின்னிப் பிணைந்து எடுக்கும் வேலை. திரு நலங்கிள்ளி இதனை மிகவும் திறம்படச் செய்துள்ளார். கடுமையான உழைப்பும், தளராத முயற்சிகளும் இதன் பின்னணியில் இருப்பதை என்னால் உணர முடிகிறது. பல இடங்களில் புதிய சொற்களை உருவாக்கியும் அவற்றின் பொருளானது அடிப்படையைச் சிதைத்துவிடாமலும் இருக்கும் வண்ணம் மிக கவனமாகவும் ‘அறிவியல் தமிழ்’ என்னும் கத்தி மேல் பக்குவமாய் நடந்துள்ளார். தமிழில் இது ஒரு புதிய முயற்சி.
ஆல்பர்ட் ஐன்ஸ்டீனுக்குப் பிறகு தமது அறிவியல் ஆராய்ச்சி மூலமாக உலக மக்களின் அறிவியல் நோக்கில் பாதிப்பு ஏற்படுத்தியவர்கள் வரிசையில் ஸ்டீஃபன் ஹாக்கிங் முக்கியமான இடத்தைப் பிடிக்கிறார். அறிவியலாளர் கார்ல் சகனின் முன்னுரையில் ஸ்டீஃபன் ஹாக்கிங்கைத் தாம் முதல் முறை பார்த்த விதத்தை சொல்லும் போது நமக்கு நெஞ்சு உருகிறது. ஹாக்கிங்கின் தன்னுரையில் தமக்கு கை,கால் செயல் இழந்தது மட்டுமன்றி பேச்சும் முடியாமல் போனதைப் படிக்கும் போது இந்த மனிதரின் விந்தைகளுக்கு ஒரு அளவே இல்லையா என்று தோன்றுகிறது. மனிதப் பிறப்பின் மகோன்னதத்தைப் பறைசாற்றும் காட்சி அதைப் படிக்கும் ஒவ்வொருவின் மனத்திரையிலும் உதிக்கும் என்று நான் உணர்கிறேன்.
Reviews
There are no reviews yet.