மலர்வதியின் கய்த பூவு, பெண்மீது நிகழ்த்தப்படும் பாலியல் கொடுமையை விவாதிக்கும் நாவல். பல்வேறு குடும்பங்களின் கிளைக்கதைகளுடன் பலதரப்பட்ட பெண்களின் கதைகளாக விரிகிறது இந்த நாவல். குமரி வட்டாரத்தில் புழங்கும் சொற்கள் இந்நாவலுக்கு அழகிய வண்ணத்தைச் சேர்க்கின்றன. சின்னஞ்சிறு வயதில் நடக்கும் விளையாட்டுத் திருமணத்தில் தொடங்குகிறது இந்த நாவல். சுதனும் ரோசாவும் பால்ய காலத்திலிருந்து நட்புடன் வளர்ந்துவருகிறார்கள். பருவ வயதைக் கடக்கும்போது சுதன் சுதந்திரமான காதலை, கட்டுப்பாடுகளற்ற பாலுறவை, நிர்ப்பந்தமற்ற உறவுகளை விரும்பி வாழும் இன்றைய நவீன ஆணாக மாறி வளர்கிறான். ரோசா அவனை மட்டும் விரும்பும் பெண்ணாக வளர்ந்திருக்கிறாள். இவ்விருவரின் வாழ்வை எதிரும் புதிருமாக வைத்தபடி நகர்கிறது நாவல். பெண்ணின் திருமணத்தை, அதன் அரசியலை, சமூக மதிப்பீடுகளை விரிவாகப் பேசும் மலர்வதி, ரோசா எனும் கதாபாத்திரம் மூலமாகக் குமரி நிலத்துப் பெண்களின் அன்றாட வாழ்க்கைப்பாடுகளை அறியச்செய்கிறார். இது மலர்வதியின் ஐந்தாவது நாவல்.
“எங்கோ போய் விட்டு வருகையில் எனக்காக என் கோரம்பாயும், தலையணையும், ஒரு சுவரும் காத்திருக்கும்…அதன் விரிப்பில் பேsi சிரிக்க சண்டை போட என யாருமே இருக்க மாட்டார்கள். என் விருதுகளும் படைப்புகளும் கூட அங்கே வர போவதில்லை.பேசுவதில்லை… திருநாள்கள், குடும்ப நிகழ்வுகள், பண்டிகைகளெல்லாம் ஒரு போதும் சுகப்படுத்தியிருக்கவில்லை. ஒரு வகையில் அவைகளெல்லாம் தொடர்பு இல்லாதது போலவே ஆகி விட்டன…எனக்கு மட்டுமல்ல குடும்ப அமைப்பு இல்லாத பலரின் வாழ்க்கையும் எங்கோ ஒற்றப்பட்டு தான் போய் நிற்கின்றன…அப்படி பட்டவர்களின் வாழ்க்கையை வடிவம் செய்து எழுதிய நாவலே ‘கய்த பூவு’”
– மலர்வதி
Reviews
There are no reviews yet.