கல்விக்கூடங்கள் கற்றுத்தராத பல்வேறு அறிவுணர்தல்களை, ஒரு சமூகமோ அல்லது ஒரு தெருவே வெகு எளிமையாகக் கற்றுத்தந்துவிடுகிறது. அதன்போக்கில் நாம் அனிச்சையாக இருந்தால்போதும், அக்கற்றல் நம் ஒவ்வொருவருக்கும் வசமாகும். இதற்கான மிகப்பெரிய சாட்சிப்புத்தகம் ராகுல் அல்வரிஸ் எழுதிய ‘Free from School’ புத்தகம். நேரடியான ஒரு சாட்சியின் கதை.
குழந்தமை மாறாத பதினாறு வயது சிறுவனாக ராகுல் பத்தாம் வகுப்பு முடித்தபோது, அவருடைய தந்தை கிளாட் அல்வரிஸ் அவனுக்கு ஒரு வாய்ப்பு வழங்குகிறார். அதன்படி ஓராண்டு நிறுவனக்கல்வி துறந்து, வீட்டைவிட்டு வெளியேறி சமூகத்திடமும் எளிய மக்களிடமும் கற்கச்செல்லும் ஒரு பயணத்தை மேற்கொள்வது! முழுக்க முழுக்க தன் வாழ்க்கைக்குத் தானே பொறுப்பேற்கும் நிலை. உடன்படித்த பள்ளித்தோழமைகள் அனைவரும் கல்லூரிக்கு நகர, ராகுல் மட்டும் தந்தையின் சொல்லை ஏற்றுக்கொண்டுத் தெருக்களை நோக்கிச் செல்கிறான்.
ஒரேயொரு நிபந்தனை மட்டும் ராகுலுக்கு விதிக்கப்படுகிறது. அது, இந்த ஓராண்டில் தனக்குள் நடக்கும் ஒவ்வொரு அனுபவ அறிதல்களையும் சிறுகுறிப்புகளாக தனது டைரியில் குறித்துவைத்து, மாதத்திற்கு ஒரு முறை தன் பெற்றோருக்கு ஒரு கடிதம் எழுதவேண்டும். ஆரம்பத்தில் மந்தமாகத் துவங்கிய ராகுலின் பயணம், மெல்லமெல்ல ஒவ்வொரு நாளையும் வாழ்வுக்கற்றலாக மாற்றி விறுவிறுப்பாகியது.
இந்த ஓராண்டு பயணக்கல்விக் காலகட்டத்தில், பல்வேறு வளர்ப்பகங்களுக்கும் சரணாலயங்களுக்கும் சகபணியாளனாகச் சென்று பாம்புகள், மண்புழுக்கள், சிலந்திகள், ஆமைகள், காளான்கள், எறும்புகள், கோழிகள் உள்ளிட்டப் பல்வேறு உயிர்களின் வாழ்வுபற்றி அறிந்து, அதன்வழியே இயற்கைக்கல்வியை என்றும் மறக்காத வாழ்க்கைப்பாடமாக ஆக்கிக்கொண்டான். ராகுல் அல்வரிஸ், தனது ஓராண்டுப் பயணத்தின் நினைவுக்குறிப்புகளைச் சேகரித்து, பதினேழாவது வயதில் எழுதிய புத்தகமான Free from school புத்தகத்தின் தமிழ்மொழியாக்கமே “தெருக்களே பள்ளிக்கூடம்”.
Reviews
There are no reviews yet.