தனது கவிதைகளெல்லாம் ஓவியங்களோடு வெளிவர வேண்டும் என்பது மகாகவி பாரதியின் கனவு. வாழ்ந்த காலத்தில் அக்கனவு மெய்ப்படவில்லை. மறைவுக்குப் பிந்தைய காலத்தில் தமிழின் முதல் நாளிதழான ‘சுதேசமித்திரன்’ 1934-1937 காலப்பரப்பில் பாரதியின் நூற்றுக்கு மேற்பட்ட கவிதைகளை ஓவியங்களோடு பெரிய அளவில் தொடர்ந்து வெளியிட்டது. இந்த ஓவியங்களை வரைந்தவர் ‘மணிக்கொடி’ இதழின் முதல் வெளியீட்டிலேயே கருத்துப்படம் வரைந்த பெருமைக்குரிய கே.ஆர். சர்மா. ‘காந்தி’ இதழில் இவர் வரைந்த கருத்துப்படங்கள் இங்கிலாந்திலிருந்து வெளிவந்த பத்திரிகையில் மறுவெளியீடு பெற்ற பெருமைக்குரியவை. இவர் வரைந்த ஓவியங்கள் பாரதிதாசனின் ‘ஸ்ரீ சுப்ரமண்ய பாரதி கவிதாமண்டல’த்தையும் அணிசெய்த சிறப்புக்குரியவை.
‘சுதேசமித்திர’னில் தொடர்ந்து பாரதி கவிதைகளுக்கு இவரது கைவண்ணத்தில்தான் ஓவியங்கள் உருப்பெற்றன. பாரதியின் கவிதைகளை மக்களிடம் பரவலாகக் கொண்டுசேர்த்ததில் இவற்றுக்குத் தனி இடம் உண்டு. எண்பத்து மூன்று ஓவியங்களை முதன்முறையாகக் கண்டெடுத்து அரிய பின்னிணைப்புகளோடும் விரிவான ஆராய்ச்சி முன்னுரையோடும் இத்தொகுதியைப் பாரதி அறிஞர் ய. மணிகண்டன் தமிழுலகுக்கு வழங்கியிருக்கிறார். பாரதியியல், இதழியல், கலையியல் என்னும் முக்களங்களிலும் ஒளிபாய்ச்சும் ஓவியத் தொகுதி இது.
Reviews
There are no reviews yet.