எர்னெஸ்ட் ஹெமிங்வே

எர்னெஸ்ட் ஹெமிங்வே

அமெரிக்க இலக்கிய உலகில் முக்கியமான இடத்தை வகிப்பவர் எர்னெஸ்ட் ஹெமிங்வே. ஏழு நாவல்கள், ஆறு சிறுகதைத் தொகுப்புகள் மற்றும் இரண்டு கட்டுரைத் தொகுப்புகள் என்று தன் வாழ்நாளில் ஆங்கில இலக்கியத்துக்கு அவர் தந்த படைப்புகள் உலகப் புகழ்பெற்றவை. அவரது இறப்புக்குப் பிறகும் சில படைப்புகள் வெளியாகி அவருடைய புகழை உறுதிசெய்தன.

1899-ல் அமெரிக்காவின் இலினாய்ஸ் மாகாணத்தின் ஓக் பார்க் நகரில் கிளாரனெஸ் எட்மண்ட்ஸ் ஹெமிங்வே – கிரேஸ் ஹாலுக்கும் பிறந்தவர் எர்னெஸ்ட் ஹெமிங்வே. தந்தை மருத்துவர், தாய் இசைக் கலைஞர்.
ஓக் பார்க் அண்ட் ரிவெர் பாரெஸ்ட் பள்ளியில் கல்வி, விளையாட்டு, இசை என்று பல்வேறு திறமைகளை வளர்த்துக்கொண்ட ஹெமிங்வே, பள்ளியில் நடத்தப்பட்ட ‘செய்தித்தாள்’ வகுப்பிலும் பங்கேற்று எழுத்துத் திறமையைப் பட்டை தீட்டிக்கொண்டார்.

இளம் வயதில், முதல் உலகப் போரில், செஞ்சிலுவைச் சங்கத்தின் சார்பில் அவசரச் சிகிச்சை வாகன ஓட்டுநராகப் பணிபுரிந்தார். இத்தாலியில் அந்நாட்டுப் படைவீரர்களுக்கு உணவுப் பொருட்கள் கொண்டுசென்றபோது குண்டுவீச்சுத் தாக்குதலில் காயமடைந்தார். 1919-ல் அமெரிக்கா திரும்பினார்.

பின்னாட்களில் எழுத்தாளராகப் புகழ்பெற்ற பின்னர், தனது போர் அனுபவங்கள்குறித்தும் எழுதினார். அவர் எழுதிய ‘ஓல்ட் மேன் அண்ட் த சீ’ (கிழவனும் கடலும்) நாவலுக்காக, 1952-ல் அவருக்கு புலிட்சர் விருது வழங்கப்பட்டது. 1954-ல் இலக்கியத்துக்கான நோபல் பரிசும் ஹெமிங்வேக்கு வழங்கப்பட்டது.
நன்றி: இந்து தமிழ் திசை

  • 21 July 1899
  • Male
  • 8