‘குக்கூ குழந்தைகள் வெளி ‘யைப் பொறுத்தவரை, எழுத்தாளர் வாண்டுமாமாவின் நீட்சியாகவே, அண்ணன் யூமா வாசுகி அவர்களைக் கருதுகிறோம். வாண்டுமாமாவை அவருடைய இறுதிநாட்களில் நாங்கள் சந்திக்க நேர்ந்தது. வாழ்வு நெருக்கடியும் நோய்மைச்சூழலும் துன்புறுத்திய காலத்திலும்கூட, வாழ்வைவிட்டுச் சிறிதும் நம்பிக்கையிழக்காத அவருடைய கனிவுப் பெருங்குரலாகவே, யூமா அவர்களின் அமைதிக்குரலையும் நாங்கள் அர்த்தப்படுத்துகிறோம்.
கலைஞன் நலிவடைய நேர்ந்தாலும் அவன்தன் கலையை நலிவடைய விடுவதில்லை. காரணம், அவன் அதைத் தனது ஆத்மச்சுடருக்குப் பக்கத்தில் வைத்து அணையாமல் பாதுகாக்கிறான்.
தன்னறத்தின் முதல் இலக்கிய விருது, எழுத்தாளர் யூமா வாசுகிக்கு அளிக்கப்படுவதில் நிறைகூர்ந்த உவகையடைகிறோம். இந்த விருது அவருடைய இத்தனைக்கால படைப்புமுகத்திற்காக வழங்கப்படுகிறது. இலக்கியச்சூழலில் சில படைப்பாளிகளே அடுத்த தலைமுறைக்கான ஆசிரியர்களாக எழும் அகத்தகுதி உடையவர்களாக மாறிநிற்கிறார்கள். அப்படி ஒரு வரிசையை நாம் உருவாக்கிக் கொண்டால், அதில் தவிர்க்கமுடியாத படைப்பாளியாக யூமா தனித்துநிற்பார். காலம் அவருக்காக அளிக்கக் காத்திருக்கும் உயரங்களை நாங்களறியோம்; ஆனால், இவ்விருதின் வழியாக நாங்கள் அவருக்குச் சொல்வது ஒன்றே ஒன்றுதான். இத்தனை படைப்புகளை படைத்தபின்பும் தனக்குள் வாழும் குழந்தைமையைத் தொலைத்துவிடாத அந்த தூயமனதை நாங்களும் வழிதொடர முயல்கிறோம் என்பதே அது.
Reviews
There are no reviews yet.