கடந்து போன ஒரு எளிமையான மனிதரைப் பற்றிய ஒரு தொலை நோக்கு சித்திரம். மகாத்மா என்ற பெயருக்கு சொந்தக்காரர். அவர் அதை ஏற்றுக் கொண்டாரா என்ற வரலாறு ஒரு புறமிருக்க அவரைப் பற்றிய நினைவுகள் நேர் மறையாகவும் எதிர் மறையாகவும் இன்றும் அவதானித்துக் கொண்டே இருக்கின்றன. என்னளவில் அந்த மகாத்மாவை பற்றிய சித்திரம் பள்ளியின் வயதில் பெருமை மிக்கதாய் அமைய காலப்போக்கில் திரிந்த வரலாற்றில் சுதந்திரப் போராட்டத்தில் அவரும் ஒருவர் என்ற கீழ்மட்ட எண்ணத்தை தோற்றுவித்தது எனது அபாக்கியமே. தேடல் இல்லாது எதுவுமில்லை தேடலில் கிடைக்காதது எதுவுமில்லை.
மீண்டும் அவரைப் பற்றிய தேடலுக்கான தொடக்கம் ஆரம்பித்தது ஏ.கே.செட்டியாரின் பயணக்குறிப்புகளின் முழு தொகுப்பை படிக்கத் தொடங்கிய போது ஏற்பட்டது. காரணம் அந்த எளிய மனிதருக்காக இன்னொரு எளிய மனிதர் தன் வாழ்நாளின் பெரும்பகுதியை அவருக்கானத் தேடலில் செலவிட்டதே. முதலாய் சத்திய சோதனை புத்தகத்தை படிக்க தொடங்கிய போதே அவரின் எளிமையையும், குழந்தைத் தனத்தையும், சுயநலச்சார்பில்லா பொது சேவகத்தையும் கண்டு வியப்பைக் கொடுத்தது. இந்தியாவின் சுதந்திரத்தில் பெரு வாரியான மக்களை தன் எளிமையான செயல்பாட்டால் தன்னுள் இழுத்துக் கொண்ட விதம் மனதில் அவரைப் பற்றிய ஒரு தொலைநோக்கு சிந்தனையைப் படர விட்டது. அப்படி இருந்தும் மனதில் ஒரு நெருடலாய் அவரைப் பற்றிய அவதூறுகளும் ஓடிக் கொண்டே இருக்க அந்த தேடலின் வரிசையில் காந்தியைப் பற்றிய புரிதலைக் கொண்ட ஜெயமோகனின் “இன்றைய காந்தி” யைப் படிக்கத் தொடங்கினேன்.
என்னை மட்டில் புத்தகம் எண்ணங்களை விரிவடையச் செய்ய வேண்டுமே தவிர வாத விவாதங்களுக்காய் அமைவதில் எந்த பலனும் இல்லை. காரணம் அவரவருள் ஒருவரைப் பற்றிய எண்ணத் தொகுப்புகள் அவர்களைச் சார்ந்தே கட்டி எழுப்பப்படுகின்றன. இந்த புத்தகம் காந்தியை பற்றிய புரிதலை அவருக்கே உரித்தான நடையைக் கொண்டு சொல்லுவதே.
நன்றி:சுதீரன் சண்முகதாஸ்
Reviews
There are no reviews yet.