தமிழில் திரைப்படம் என்ற சினிமா (இதனை தமிழில் ‘திரையாக்கம்’ என்ற சொ்ல்லால் குறிக்கலாம்) குறித்து ஒரு வெளிப்படையான ஒவ்வாமையும் உள்ளார்ந்த ஒரு பெருவிருப்பும் உள்ளது என்பதை தமிழ் சினிமா குறித்த சமூகவியல் விளக்குவதாக உள்ளது. இந்தியா போன்ற பெரிய நிலப்பரப்பைக்கொண்ட பல மொழிகள், பல பண்பாடுகள் கொண்ட ஒரு ஒன்றிய அமைப்பில் சினிமா ஒரு பொதுக் கருத்தியல் உற்பத்தி எந்திரமாக உள்ளது. குடிமக்களை குடியாண்மைச் சமூகத்திற்கு இயைபுபடுத்துவதாக, ஒரு பொது மனித, இன அடையாளத்தை உருவாக்கக்கூடியதாக உள்ளது. மற்ற கலைகளைவிட சினிமா உருவாக்கும் பாதிப்பு அதிகமானது.
அதனால்தான் சினிமா ஒரு கலை அல்ல கலை போன்ற பிறிதொன்று, அதனை சினிமா அல்லது திரையா்க்கம் என்றே அழைக்க வேண்டும். இதன்பொருள் திரையாக்கம் என்பது கலை போன்று ஒரு புதிய அறிதல் வடிவம் என்பதே. நமது புறஉலகை அகஉலகின் திரையாக்கமாக மாற்றிய ஒன்றே சினிமாவின் உடலரசியல் வினை. அவ்வினையின் விளைவு, சினிமா ஒரு சமூகத்தை வடிவமைப்பதாக, புழங்குலகை வழக்குலகாக (actualized world) உருவமைப்பதாக உள்ளது.
எளிமையாகச் சொன்னால், சினிமா எனும் திரையாக்கம் யதார்த்தத்தை பிரதிபலிப்பதில்லை, மாறாக, யதார்த்தத்தை கட்டமைக்கிறது மற்றும் உருவமைக்கிறது. பார்வையாளர் என்ற காணும் எந்திரங்களை தனது திரையாக்க காட்சி எந்திரம் வழியாக உருவாக்குகிறது. அவ்வகையில் சினிமா மற்ற துறைகளைவிட அதிக சமூகவியல், சமூக உளவியல், சமூக அரசியல் ஆய்விற்கு உட்படுத்தவேண்டிய அவசியம் உள்ளது. அதற்கான ஒரு முன்முயற்சியே இத்தொகுப்பு.
Reviews
There are no reviews yet.